காணாமல் போன 4,000 டன் நிலக்கரி.., மழையால் அடித்துச் சென்றதாக அமைச்சர் சர்ச்சை விளக்கம்
காணாமல் போன 4,000 டன் நிலக்கரி மழையால் அடித்துச் சென்றதாக அமைச்சர் வினோதமாக விளக்கம் அளித்துள்ளார்.
அமைச்சரின் விளக்கம்
இந்திய மாநிலமான மேகாலயாவில் ராஜாஜு மற்றும் தியங்கன் கிராமங்களில் உள்ள இரண்டு நிலக்கரி சேமிப்பு மையங்களில் இருந்து கிட்டத்தட்ட 4,000 டன் நிலக்கரி காணாமல் போனது.
இந்த நிலக்கரி சட்டவிரோதமாக கடத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட மாநில உயர்நீதிமன்றம் அரசை கண்டித்து, காணாமல் போனதற்கு காரணமானவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில், இதுகுறித்து அம்மாநில ஆளும் பாஜக- என்பிபி கூட்டணி அமைச்சர் கீர்மென் ஷில்லா விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், "இந்தியாவில் அதிக மழை பெய்யும் மாநிலங்களில் மேகாலயாவும் ஒன்று. கனமழை மற்றும் வெள்ளத்தால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். கிழக்கு ஜெயின்டியா மலைகளிலிருந்து வெள்ள நீர் வங்கதேசத்திற்குள் பாய்கிறது.
இந்த வெள்ளத்தால் காணாமல் போன நிலக்கரி வங்கதேசத்திற்குள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம். மேலும்,சட்டவிரோதமாக கடத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை" என்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |