பற்றியெரியும் அமெரிக்க நகரம்... சட்ட அமலாக்க அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட நபர்
மூன்று வாரங்களுக்குள் இரண்டாவது முறையாக, மினியாபொலிஸ் நகரில் ஃபெடரல் சட்ட அமலாக்க அதிகாரிகளால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கிச்சூடு
துப்பாக்கிச்சூடு குறித்த உறுதியான தகவல்கள் தங்களுக்குத் தெரியவந்துள்ளதாக மினியாபொலிஸ் அதிகாரிகள் சனிக்கிழமை காலை தெரிவித்தனர்.

அமெரிக்கக் குடிமகளான ரெனி குட் ஜனவரி 7 ஆம் திகதி மினியாபொலிஸில் ஒரு ஃபெடரல் குடிவரவு அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்தத் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்துள்ளது.
ரெனி குட் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களுக்கு காரணமானது. இந்த நிலையில் தற்போது நகர மற்றும் உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள தங்கள் அறிக்கையில், ஃபெடரல் சட்ட அமலாக்க அதிகாரிகள் தொடர்பான துப்பாக்கிச்சூடு சம்பவம் வெஸ்ட் 26வது தெரு மற்றும் நிக்கோலெட் அவென்யூ சவுத் ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட இடத்தில் நிகழ்ந்தது என்று தெரிவித்தனர்.
மேலும், பொதுமக்கள் அமைதி காக்குமாறும், அந்தப் பகுதியை உடனடியாகத் தவிர்த்துவிடுமாறும் கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளனர். பொலிசார் உறுதி செய்த பகுதியில் பதிவு செய்யப்பட்டதாக சமூக ஊடகத்தில் வெளியான காணொளி ஒன்றில், பல சட்ட அமலாக்க அதிகாரிகளால் தரையில் தள்ளப்பட்டு, பின்னர் பலமுறை சுடப்பட்டதாக அதில் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், சுடப்பட்ட நபர் மினியாபொலிஸில் வசித்து வந்த 37 வயதுடைய ஒரு அமெரிக்கக் குடிமகன் என்று நம்பப்படுவதாக மினியாபொலிஸ் காவல்துறைத் தலைவர் பிரையன் ஓ'ஹாரா தெரிவித்தார்.

பெரும் கொந்தளிப்பு
மேலும் அவர் குறிப்பிடுகையில், இன்று எங்கள் கோரிக்கை என்னவென்றால், எங்கள் நகரத்தில் செயல்படும் அந்த ஃபெடரல் அதிகாரிகள், திறமையான சட்ட அமலாக்கத்திற்குத் தேவைப்படும் அதே ஒழுக்கம், மனிதாபிமானம் மற்றும் நேர்மையுடன் செயல்பட வேண்டும் என்பதே ஆகும் என்றார்.
மட்டுமின்றி, பொதுமக்கள் அனைவரும் அமைதி காக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். நடந்த சம்பவங்கள் குறித்துப் பெரும் கோபமும் கேள்விகளும் நிலவுகின்றன என்பதை நாங்கள் உணர்கிறோம் என்றார்.

உள்ளூர் நேரப்படி பகல் 9 மணிக்கு நடந்த இச்சம்பவம், பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை அன்று, கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல், 1,500 மினசோட்டா மக்கள் ICE அதிகாரிகளுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மினியாபொலிஸ் விமான நிலையத்தைச் சுற்றி மக்கள் கூட்டம் நீண்ட வரிசையாகச் சூழ்ந்து, புறப்படும் முனையத்தின் நீளத்திற்கு ஒரு மறியல் கோட்டை அமைத்தனர். ஜனாதிபதி ட்ரம்ப் இந்த நடவடிக்கைகளை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வலுத்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |