கூட்டு பலாத்கார வழக்கில் கைதான சிறுவன்; கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட அறையில் தற்கொலை!
இந்தியாவில் கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட சிறுவன் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாநிலம் ஜார்கண்டில் உள்ள பாகூர் நகரத்தில், கடந்த ஏப்ரல் 13-ஆம் திகதி இரவு, 35 வயதான ஒரு பெண்ணை 11 பேர் கொண்ட கும்பல் கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்தது.
பாதிக்கப்பட்ட பெண் ஏப்ரல் 15-ஆம் திகதி காவல்துறையில் புகார் அளித்ததையடுத்து, இந்த வழக்கில் ஒரு சிறுவன் உட்பட குற்றம் சாட்டப்பட்ட 11 பேரையும் பொலிஸார் ஏப்ரல் 16-ஆம் திகதி கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டபோது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதனையடுத்து, அப்பெண்ணை மாறிமாறி சீரழித்ததாகக் கூறப்படும் அந்த 11 பேரும் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில், 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
ஆனால் அந்த குறிப்பிட்ட சிறுவனுக்கு தொற்று ஏற்படவில்லை என்பதால், பாதுகாப்பு காரணங்களுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் தனி அறையில் ஏப்ரல் 17-ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்டார்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 22) அந்த சிறுவன் தனிமைப்படுத்தப்பட்ட அறையிலேயே தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டதாக ஜார்கண்ட் டி.எஸ்.பி விஜய் குமார் தெரிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.