தடைகளை வெற்றிப் படிகளாக மாற்றிய பெண்! ரூ.1,290 கோடி சொத்து மதிப்புக்கு சொந்தக்காரர் யார்?
பிரபலமான இயற்கை ஆயுர்வேத அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான Forest Essentials-யின் நிறுவனரான மீரா குல்கர்னி (Mira Kulkarni) தனது கடினமான உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் மிகப்பெரிய உயரத்தை அடைந்துள்ளார்.
ஆரம்ப கால போராட்டங்கள்
மீரா குல்கர்ணி-க்கு ஆரம்ப கால வாழ்க்கை சுமுகமாக இல்லை. இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்ட அவர், கணவரின் வியாபாரம் தோல்வி அடைந்து பிறகு கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டார்.
மற்றொரு புறம் குடும்ப செலவுகளை ஈடுசெய்ய வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட வேண்டியிருந்தது.
விடாமுயற்சியே வெற்றியின் திறவுகோல்
தனது மகளின் திருமணத்திற்கு பிறகு, 45 வயதில் மெழுகுவர்த்திகள் மற்றும் கையால் செய்யப்பட்ட சோப்புகளை தயாரிப்பதில் மீரா குல்கர்னி ஆர்வம் காட்டினார்.
இந்த ஆர்வம் ஒரு வணிக யோசனையைத் தூண்டியதோடு, அதன் விளைவாக 2000 ஆம் ஆண்டில், Forest Essentials என்ற நிறுவனம் உருவாக காரணமாக அமைந்தது.
2 லட்சம் ரூபாய் முதலீட்டுடன், 2 பேர் கொண்ட ஒரு சிறிய குழுவால் கேரேஜில் இருந்து Forest Essentials நிறுவனம் இயங்கத் தொடங்கியது.
தரத்தை உறுதி செய்வதில் உறுதியாக இருந்த மீரா, தேவையான இயற்கை பொருட்களை டெஹ்ரி கார்வால் பகுதியில் இருந்து பெற்று, தனது பொருட்களில் ஆயுர் வேதத்தின் சாரத்தை புகுத்தினார்.
அபார வெற்றி
மீரா குல்கர்னியின் நிறுவனம் 2020 நிதிய ஆண்டில் ரூ.253 கோடியும், 2021 நிதிய ஆண்டில் ரூ.210 கோடியும் வருவாய் ஈட்டியுள்ளது.
பல ஆண்டுகளாக பார்ச்சூன் பத்திரிகை மீரா குல்கர்னியை இந்தியாவின் மிகவும் சக்தி வாய்ந்த வணிகப் பெண்களில் ஒருவராக தேர்ந்தெடுத்துள்ளது.
2020 ஆம் ஆண்டில் கோட்டக் வெல்த் ஹுருன் - முன்னணி செல்வந்த பெண்கள் பட்டியலில் ரூ.1,290 கோடி மதிப்பு சொத்துக்களுடன் இந்தியாவின் செல்வந்த பெண்களில் ஒருவராக மீரா குல்கர்னி அங்கீகரிக்கப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |