குழந்தைக்கு சுளுக்கு பிடித்திருப்பதாக தெரிவித்த மருத்துவர்கள்... பின்னர் தெரியவந்த திடுக்கிடவைக்கும் தகவல்
ஒன்ராறியோவில் வாழும் பெண் ஒருவர், கீழே விழுந்து அடிபட்ட தன் மகனை மூன்று மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்று, ஆறு மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டும் அவனுக்கு சுளுக்கு பிடித்திருப்பதாகவே மருத்துவர்கள் கூறிய நிலையில், உண்மையில் அவனுக்கு பக்கவாதம் தாக்கியிருப்பதாக ஐந்தாவது நாளில்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
11 மாதக் குழந்தையான Uzair, ஒரு நாள் கீழே விழுந்துவிட்டான். அதற்குப் பின் அவனது இடது பக்க உடலில் அசாதாரண மாற்றங்களை கவனித்த அவனது பெற்றோர், அவனை மருத்துவர் ஒருவரிடம் கொண்டு சென்றுள்ளார்கள். அந்த மருத்துவர் குழந்தையை பரிசோதித்துவிட்டு, அவனுக்கு சுளுக்குப் பிடித்திருப்பதாக கூறியுள்ளார்.
ஆனால், இரண்டு நாட்களாகியும் குழந்தையின் நிலைமையில் எந்த மாற்றமும் ஏற்படாததோடு, அவன் சாப்பிடவோ விளையாடவோ செய்யாததுடன், அவனது இடது பக்க உடலில் இயக்கம் இல்லாததையும் கவனித்த அவனது பெற்றோர், மற்றொரு மருத்துவமனைக்கு அவனைக் கொண்டு சென்றுள்ளார்கள். அந்த மருத்துவமனையிலும் அவனுக்கு சுளுக்கு பிடித்திருப்பதாக கூறிவிட்டிருக்கிறார்கள்.
இப்படியே இரண்டு மருத்துவமனைகளுக்குச் சென்ற பிறகும் குழந்தையிடம் எந்த முன்னேற்றமும் தென்படாததால், தங்கள் குடும்ப மருத்துவரை அழைத்து விவரத்தைச் சொல்லியிருக்கிறார்கள் குழந்தையின் தாயாகிய Tayab-Mohammadம் அவரது கணவரும்.
அந்த மருத்துவர் மற்றொரு மருத்துவமனைக்கு அவர்களைப் போகச் சொன்னதுடன், கூடுதல் மருத்துவப் பரிசோதனைகள் செய்யச் சொல்லுமாறு அறிவுறுத்தியிருக்கிறார்.
அதன்படி அந்த மருத்துவமனையில் குழந்தைக்கு CT ஸ்கேன் செய்யப்பட, யாரும் எதிர்பார்க்காத முடிவுகளை ஸ்கேன் தெரிவித்தது. ஆம், குழந்தைக்கு ஒரு அபூர்வ பக்கவாதம் தாக்கியிருக்கிறது என்பதுதான் அது.
மற்றொரு ஸ்கேனும் அதை உறுதி செய்ய, குழந்தை இரண்டரை வாரங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளான்.
இப்போது குழந்தை முற்றிலும் குணமடைந்துவிட்டாலும், அவன் வளர்ந்த பிறகும் கூட, கீழே விழும் சூழல் உள்ள விளையாட்டுகள் முதல் எந்த விடயங்களிலும் ஈடுபடக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
இந்த பயங்கர அனுபவம் குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று Tayab-Mohammadஐக் கேட்டால், உங்கள் குழந்தைகளுக்கு என்ன பிரச்சினை என்பது தொடர்பான விடைகளை அறிந்துகொள்ளும்வரை கேள்வி கேளுங்கள், உங்களுக்குத்தான் உங்கள் குழந்தையைத் தெரியும். அதற்கு ஏதோ பிரச்சினை என்பதும் உங்களுக்குத் தெரியும். ஆகவே, அப்படி தெரியும் பட்சத்தில் அதை அலட்சியப்படுத்தாதீர்கள் என்கிறார்.