மிஸ் பிரான்ஸ் அழகிப்போட்டியில் இம்முறை செய்யப்பட இருக்கும் மிகப்பெரிய மாற்றங்கள்
இம்முறை மிஸ் பிரான்ஸ் அழகிப்போட்டியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட இருக்கின்றன.
மிஸ் பிரான்ஸ் அழகிப்போட்டி
இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் திகதி மிஸ் பிரான்ஸ் அழகிப்போட்டி நடைபெற உள்ளது. இம்முறை, போட்டிக்கான விதிகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அழகிகள் என்றாலே உயரமாக ஒல்லியாகத்தான் இருக்கவேண்டுமா?
ஒரு குறிப்பிட்ட ஃபேஷன் ஷோவின்போது, பூனை நடைபயின்ற அழகி ஒருவர் திடீரென கீழே விழுந்துவிட்டார். ஓடோடிச்சென்று அவரைத் தூக்கியபோது, அங்கு ஒரு பெரிய அதிர்ச்சி உருவானது. காரணம், அந்த இளம்பெண் ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.
சைஸ் ஜீரோ என்று அழைக்கப்படும் அளவுக்கு ஒல்லியாக இருக்கவேண்டும் என்பதற்காக அந்த பெண் மேற்கொண்ட உணவுக்கட்டுப்பாடு அவரது உயிரைப் பறித்துவிட்டது.
அந்த விடயம் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. அத்துடன், திருமணம் ஆகாத பெண்கள், 24 வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் மட்டும்தான் அழகானவர்களா என பெண்ணிய அமைப்புகள் போர்க்கொடி தூக்கியிருந்தார்கள்.
மிஸ் பிரான்ஸ் அழகிப்போட்டியில் செய்யப்பட இருக்கும் மிகப்பெரிய மாற்றங்கள்
இந்த விடயங்களை எல்லாம் கருத்தில்கொண்டு, இம்முறை மிஸ் பிரான்ஸ் அழகிப்போட்டியில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
முன்னர் 18 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்கள்தான் அழகிப்போட்டிகளில் பங்கேற்க முடியும் என்ற விதி இருந்த நிலையில், Châteauroux என்ற இடத்தில் நடைபெற உள்ள 2023ஆம் ஆண்டுக்கான போட்டியில், வயது வரம்பே கிடையாது என விதிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், முதன்முறையாக, திருமணம் ஆன பெண்கள், குழந்தை பெற்றவர்கள் கூட அழகிப்போட்டியில் கலந்துகொள்ளலாம் என்றும், வெளியே தெரியும் வகையில் உடலில் டாட்டூக்கள் போட்டுக்கொண்டுள்ளவர்களும் கூட போட்டியில் கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Pic: Jade Thai Catwalk / Shutterstock