மீதமுள்ள 40 மணி நேரத்திற்கான ஆக்சிஜன்: மாயமான டைட்டானிக் சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பலை தேடும் பணியில் தொய்வு
புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலின் சிதைவுகளை பார்வையிட சென்ற நீர்மூழ்கி குழு கடலில் காணாமல் போய் உள்ள நிலையில், டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் இன்னும் 40 மணி நேரத்திற்கான ஆக்சிஜன் இருப்பு இருப்பதாக கடற்படை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மாயமான நீர்மூழ்கி கப்பல்
புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலின் சிதைவுகளை பார்வையிட 5 பேர் கொண்ட குழு டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் சென்ற நிலையில், ஞாயிற்றுக்கிழமை அனைத்து தொடர்புகளையும் இழந்து நீர்மூழ்கி கப்பல் மாயமாகியுள்ளது.
Sky News
இந்த நீர்மூழ்கி கப்பலில் பிரித்தானியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான ஹமிஷ் ஹார்டிங்(Hamish Harding), பிரெஞ்சு நீர்மூழ்கி கப்பல் பைலட் பால்-ஹென்றி நர்கோலெட் மற்றும் ஓபன் கேட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஸ்டாக்டான் ரஷ் ஆகிய 5 பேர் கொண்ட குழு பயணம் மேற்கொண்டது.
அட்லாண்டிக் கடலில் காணாமல் போய் உள்ள டைட்டன் நீர்மூழ்கி கப்பலை தேடும் பணியில் அமெரிக்க கடலோர காவல் படை ஈடுபட்டுள்ளது.
மீதமுள்ள 40 மணி நேரம் ஆக்சிஜன்
டைட்டன் நீர்மூழ்கி கப்பலை தேடும் பணி பல மணி நேரங்களாக தொடர்ந்து வரும் நிலையில், இதுவரை நீர்மூழ்கி கப்பல் குறித்து எந்த விடையும் கிடைக்கவில்லை என அமெரிக்க கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கடலோர காவல் படையின் கேப்டன் ஜேமி பிரடெரிக் தெரிவித்த தகவலில், தேடுதல் பணி மிகவும் சிக்கலாக இருப்பதாகவும், கூடுதலான மீட்பு ஏஜென்ஸிகளின் உதவி தேவைப்படுவதாக கூறியுள்ளார்.
Dirty Dozen Productions
அத்துடன் காணாமல் போன நீர்மூழ்கி கப்பலில் உள்ள 5 பேருக்கு 40 மணி நேரத்திற்கான ஆக்சிஜனை மட்டுமே மீதம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, கடலுக்குள் நீர்மூழ்கிக் கப்பலில் சுமார் 96 மணி நேரங்கள் வரை இருப்பதற்கான வசதிகள் உள்ளது என கடலோர காவல்படை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Pic: Ifremer