மாயமான உக்ரைன் பெண் ஊடகவியலாளர்: முக்கிய உறுப்புகள் அகற்றப்பட்ட நிலையில் கிடைத்த சடலம்
உக்ரைன் பெண் ஊடகவியலாளர் ஒருவர் மர்மமான முறையில் மாயமான நிலையில், அவரது கண்கள் மற்றும் மூளை ஆகிய உறுப்புகள் அகற்றப்பட்ட அவரது உடல் அவரது நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
மாயமான உக்ரைன் பெண் ஊடகவியலாளர்
2023ஆம் ஆண்டு, உக்ரைன் பெண் ஊடகவியலாளரான விக்டோரியா (Viktoria Roshchyna, 27), ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதியான Zaporizhzhiaவுக்கு செய்தி சேகரிப்பதற்காக சென்றுள்ளார்.
அங்குள்ள ரஷ்ய சிறைகளில் உக்ரைனியர்கள் நடத்தப்படும் விதம் குறித்து செய்தி சேகரிப்பதற்காக சென்ற விக்டோரியா மர்மமான முறையில் மாயமானார்.
பின்னர், இந்த ஆண்டு ஜனவரி மாதம் இருதரப்பும் உயிரிழந்த உடல்களை பரஸ்பரம் ஒப்படைத்தபோது, உக்ரைனிடம் 757 உடல்கள் ஒப்படைக்கப்பட்டன. அவற்றில், அடையாளம் தெரியாத ஆண் என குறிப்பிடப்பட்ட ஒரு உடலும் இருந்தது.
உண்மையில், அது விக்டோரியாவின் உடல். அந்த உடலை உக்ரைன் அதிகாரிகள் சோதித்தபோது, அதில், கண்கள், குரல்வளை மற்றும் மூளை ஆகிய உறுப்புகள் அகற்றப்பட்டிருந்தன.
உலர்ந்து சுருங்கிப்போயிருந்த அந்த உடலில் மின்சாரம் பாய்ச்சப்பட்டது, கழுத்து நெறிக்கப்பட்டது, உடைந்த விலா எலும்புகள் என காணப்பட்ட அறிகுறிகள், விக்டோரியா கடுமையான சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டதற்கு அடையாளமாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
செய்தி சேகரிப்பதற்காகச் சென்ற ஊடகவியலாளர் ஒருவர் இவ்வளவு கொடூரமாக சித்திரவதைக்குட்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்ட விடயம் சர்வதேச அளவில் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |