ஸ்பெயின் புறப்படுகிறார் தமிழக முதலமைச்சர்.., முதலீடுகளை ஈர்க்க 10 நாட்கள் சுற்றுப்பயணம்
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு ஸ்பெயின் நாட்டிற்கு புறப்படுகிறார்.
தமிழகத்தில் முதலீட்டாளர்களை ஈர்க்க வேண்டும் என்று தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு பெரிய நிறுவனங்கள் தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் அமைத்தால் அதன் மூலம் வேலைவாய்ப்புகள் பெருகும் என தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சில தினங்களுக்கு முன்பு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இதன் மூலம் 27 லட்சம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
ஸ்பெயின் பயணம்
இந்நிலையில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க தமிழக முதலமைச்சர் ஸ்பெயின் நாட்டுக்கு செல்ல உள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று (ஜன.27) இரவு 9.45 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் துபாய் செல்கிறார். அங்கிருந்து சுவீடனுக்கு செல்கிறார். அதன்பின்னர் ஸ்பெயினுக்கு பயணம் செய்கிறார்.
அங்கு சென்றவுடன் பல்வேறு நாட்டு தொழில் அதிபர்கள், வெளிநாட்டு அரசு பிரதிநிதிகளை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது. 10 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் செல்லும் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 7 -ம் திகதி சென்னை திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |