தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பு - திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு
தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்கிறேன் என திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், 176 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 59 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்தது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் தோல்வியை தழுவினர்.

இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "என்ன ஆனாலும் சரி, சூரியன் ஒருபோதும் மறையாது. திரும்ப உதித்தே தீரும். சூரியன் இல்லாமல் எதுவும் நடக்காது. இது இயற்கை நியதி மட்டுமில்ல, தமிழ்நாட்டு அரசியல் நியதியும் இதுதான்
நம்மை பார்க்குற எல்லோருமே, ஏன் சோஷியல் மீடியாலயுமே, எப்படியும் தி.மு.கதான் ஜெயிக்கும்னு நினைச்சோம். அதனால, என்னோட ஒரு ஓட்டுல என்னாகிடும்னு தெரியாம போட்டுட்டோம்”னு புலம்புறாங்க.
அதுமட்டுமில்ல, “இப்படி ஒரு கட்சிக்கு வோட்டு போட்டு ஆட்சியில உட்கார வெச்சிட்டோமனு பலரும் வருந்தி பதிவு போடுறதையும் பார்க்குறேன். இதுதான் நம்ம ஐந்தாண்டு கால நல்லாட்சிக்கு கிடைச்ச அங்கீகாரம். ஆனால் அந்த அங்கீகாரம் தேர்தல் வெற்றியாக மாறவில்லை.
பொதுவாழ்க்கைக்கு வந்தால் வெற்றி தோல்வி சகஜம். ஏற்ற இறக்கங்கள் இருக்கும். மேடு பள்ளங்கள் இருக்கும். அதுதான் அரசியல். என்னைப் பொறுத்த வரையில, கடந்த ஐந்தாண்டு காலமும் கடுமையாக உழைத்தேன். உங்களையும் உழைக்க வைத்தேன்.

இதுவரை எந்த அரசும் செய்து தராத சாதனைகளை நாம் செய்து கொடுத்தோம். கோடிக்கணக்கான மக்களுக்கு நேரடிப் பயன் தரும் ஆட்சியாக நம் ஆட்சி இருந்தது. இது மக்களுக்குத் தெரியும். இருந்தாலும் நாம் ஆட்சி அமைக்க முடியவில்லை.
இதற்காக, நான் யாரையும் சுட்டிக்காட்டி குறை சொல்ல விரும்பவில்லை. தோல்விக்கான காரணங்களை கழக நிர்வாகிகள் தொடங்கி, பொதுமக்கள் வரை எல்லா விதமாகவும் பேசுகிறார்கள். ஒருவர் இன்னொருவரை குற்றம் சொல்லுகிறார்.
யாரும் யாரையும் குறை சொல்லாதீர்கள். கழகத்தின் தலைவர் என்ற முறையில், நானே இந்தத் தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.
இந்த தேர்தலில் நடந்திருப்பது புதுவிதமான கவர்ச்சி மாயாஜால சுனாமி. சுனாமி என்றால் சாகசமோ, சாதனையோ கிடையாது. தமிழ்நாட்டின் நலன்களை பாதித்திருக்கும் சுனாமி பேரழிவு இது.
இது தேர்தல் சுழல்தானே தவிர, நாமெல்லாம் எழுந்திருக்கவே முடியாத தோல்வி கிடையாது. தேர்தல் தோல்வி குறித்து தொண்டர்கள் கருத்து சொல்ல ஏதுவாக தனி இணையதளம் தொடங்கப்படும். திமுக செய்த தவறுகள் குறித்தும் எதிர்பார்க்கும் மாற்றங்கள் குறித்தும் தொண்டர்கள் கருத்து சொல்லலாம்.
சமூக வலைதளங்கள் மிகப்பெரிய களமாக உருவெடுத்திருப்பது இந்த தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தெரியவந்துள்ளது. தொழில்நுட்பங்களை கையாள்வதில் திமுகவினர் இனிமேல் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
திமுக அமைப்பு முறையில் மிகப்பெரிய மாற்றம் கொண்டுவர திட்டமிட்டிருக்கிறேன். அந்த மாற்றம்தான் கட்சியை இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு உயிர்ப்போடு வைத்திருக்கும்.
இனிமேலாவது கோஷ்டி அரசியலை விட்டுவிட்டு அனைவரையும் அரவணைத்துப் போக வேண்டும். செயல்பட முடியாது என நினைக்கும் திமுக நிர்வாகிகள் மனப்பூர்வமாக முன்வந்து விலகிக் கொள்ளுங்கள் " என பேசியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |