சசிகலாவை சந்திக்க போகும் முன்னணி நடிகரான எம்.எல்.ஏ மற்றும் இன்னொரு பிரபலம்! தேர்தல் நெருங்குவதால் அதிர்ச்சியில் அதிமுக தலைமை
சசிகலாவை நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் மற்றும் எம்.எல்.ஏ தனியரசு சந்திக்கவிருப்பதாக வரும் தகவல்கள் அதிமுக தலைமைக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து விடுதலையான சசிகலா கடந்த 9ஆம் திகதி சென்னை திரும்பினார்.
அன்றிலிருந்து பொதுவெளியில் தோன்றாமல் மௌனம் காத்துவந்த சசிகலா நேற்று ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி வெளியில் வந்தார்.
அதன்பின் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா சரத்குமார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோர் சசிகலாவைச் சந்தித்தனர்.
இந்நிலையில், அதிமுக கூட்டணியில் எம்.எல்.ஏ.வாக இருக்கும் கருணாஸ் மற்றும் தனியரசு ஆகியோர் ஏற்கனவே சசிகலாவிற்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதில் கருணாஸ் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் சசிகலா மூலமாகத்தான் எம்.எல்.ஏ. ஆனேன் எனத் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து விரைவில் கருணாஸ் மற்றும் தனியரசு ஆகியோரும் சசிகலாவை சந்திக்க உள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிமுக கூட்டணியில் இருக்கும் இரண்டு எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் இந்த நேரத்தில் சசிகலாவை சந்திக்கவிருப்பதாக வரும் தகவல்கள் அதிமுக தலைமைக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
மேலும் அதிமுகவில் இருக்கும் மற்ற கூட்டணிக் கட்சியினரும் சசிகலாவை சந்திக்க முனைப்பு காட்டுவதாகத் தெரிகிறது.