இலங்கை நாடு இடம்பெறவில்லை; ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வேண்டும் - MLA சிந்து கோரிக்கை
Mla sindhu request eezham tamil citizenship in assembly: இந்தியாவில் ஈழத்தமிழர்களின் குடியுரிமை குறித்து எம்.எல்.ஏ சிந்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் கோரிக்கை முன்வைத்தார்.
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை, போக்குவரத்து உள்ளிட்ட மானிய கோரிக்கை குறித்த சட்டமன்ற கூட்டத்தில், ஈழத்தமிழர்கள் குடியுரிமை பெற வலியுறுத்த வேண்டும் என குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் க.சிந்து கோரிக்கை வைத்தார்.
ஈழத்தமிழர்கள் குறித்த கோரிக்கை
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை, போக்குவரத்து உள்ளிட்ட மானிய கோரிக்கை குறித்த கூட்டம் சட்டமன்றத்தில் நடந்து வருகிறது.
இதில் பேசிய குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் க.சிந்து, தமிழ்நாட்டில் வசிக்கும் ஈழத்தமிழர்கள் குறித்த கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.
அவர் கூறும்போது, "நமது ஈழத்தமிழர்கள் நெடுங்காலமாக அகதிகள் முகாமில் இருக்கிறார்கள். அவர்கள் தமிழ்நாட்டை தாய்நாடாக நினைத்து வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு நிலையான வாழ்வு இல்லை; குடியுரிமையும் மறுக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசு கொண்டுவந்த CAA சட்டத்திலும் இலங்கை நாடு இடம்பெறவில்லை. யாதும் ஊரும் யாவரும் கேளிர் என்று உரைத்த தமிழ் உறவுகளுக்கு நிலையான வாழ்வு வாழ இங்கு இடமில்லை.
ஆகையால், ஈழத்தமிழர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற ஒன்றிய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்று தங்கள் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.
அவருக்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், 'எங்கெல்லாம் தமிழ்மொழி பேசப்படுகிறதோ அவர்கள் அத்தனை பேருமே எங்களது சகோதரர்கள். எனவே ஈழத்தமிழர்களின் நலம் சார்ந்து, சட்டமன்ற உறுப்பினரின் அவர்களது அத்தனை கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும்' என்று உறுதியளித்தார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |