விளாடிமிர் புடினை மனநோயாளி என்ற பிரபல மொடல் சூட்கேசில் சடலமாக மீட்பு
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை மனநோயாளி என சமூக ஊடகத்தில் பதிவிட்ட பிரபல மொடல் சூட்கேசில் சடமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் கொள்கைகள், நாட்டு மக்களை கண்ணீரில் ஆழ்த்தும் என சமூக ஊடகங்களில் விமர்சித்து வந்தவர் 23 வயதான மொடல் Gretta Vedler.
பிரபல மொடலான இவர் ரஷ்ய ஜனாதிபதியை மனநோயாளி என குறிப்பிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட நிலையில் ஒரு மாதத்திற்கு பின்னர் திடீரென்று மாயமானார்.
இந்த நிலையில், சம்பவம் நடந்து ஓராண்டுக்கு பின்னர், குறித்த மொடலின் உக்ரேனிய நண்பர் ஒருவரின் கோரிக்கையை ஏற்று ரஷ்ய இளைஞர் ஒருவர் காணாமல் போனவர்கள் தொடர்பில் வழக்கு ஒன்றை பதிவு செய்தார்.
இந்த நிலையில், விசாரணை முன்னெடுத்து வந்த பொலிசார் குறித்த மொடலின் சடலத்தை மீட்டுள்ளனர். இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் அந்த மொடலின் ஆண் நண்பரை விசாரித்ததில், அவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.
பண விவகாரம் தொடர்பில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதில் தாம் அவரை கொலை செய்யும் சூழல் ஏற்பட்டது என Dmitry Korovin என்ற அந்த இளைஞர் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், சடலத்தை துண்டாக வெட்டி சூட்கேசுக்குள் நிரப்பி, மூன்று நாட்கள் சடலத்துடன் ஹொட்டல் அறையில் தங்கியதாகவும், பின்னர் 300 மைல்கள் தொலைவில் உள்ள Lipetsk என்ற பகுதிக்கு பயணம் செய்து, நிறுத்தப்பட்டிருந்த காரின் பின்னால் சடலத்துடன் சூட்கேசை மறைவு செய்துவிட்டு தப்பியதாகவும் அந்த 23 வயது இளைஞர் தெரிவித்துள்ளார்.
மேலும், மொடலின் நண்பர்களுக்கு சந்தேகம் எழாத வகையில், அவரது சமூக ஊடக பக்கத்தில் புகைப்படங்கள் பதிவுகளை மேற்கொண்டு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விளாடிமிர் புடின் தொடர்பில் ஜனவரி 2021ல் Gretta Vedler பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதன் ஒருமாதத்திற்கு பின்னர் அவரது ஆண் நண்பரால் கொல்லப்பட்டார்.
ஆனால் அவரது கொலைக்கும் புடின் மீதான விமர்சனத்திற்கும் தொடர்பில்லை என்றே விசாரணை அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது.
போராட்டங்களை ஒடுக்குவதும், அகண்ட ரஷ்யாவை உருவாக்க வேண்டும் என்ற புடினின் கொள்கையும் Gretta Vedler தமது சமூக ஊடக பக்கத்தில் விமர்சித்து வந்துள்ளார்.
மனநோயாளி ஒருவரால் மட்டுமே, நாட்டை இவ்வாறு பிரித்தாள முடியும் எனவும் அவர் தமது சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.