3 நாடுகள் மட்டுமே பாகிஸ்தானுக்கு ஆதரவு; போரை நிறுத்த கெஞ்சியது - மோடி விளக்கம்
ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக இந்திய பிரதமர் மோடி விளக்கமளித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர்
நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பஹல்காம் தாக்குதல் குறித்த விவாதம் நேற்றும் இன்றும் நடைபெற்று வருகிறது.
நேற்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இது தொடர்பாக விளக்கமளித்த நிலையில், இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கமளித்தார்.
இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகள் மற்றும் சந்தேகங்களை எழுப்பினர்.
மோடி விளக்கம்
இதனை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, பஹல்காம் தாக்குதல் இந்தியா, இந்திய மக்களுக்கு எதிரான சதித் திட்டம். ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த கொடூரமான சம்பவம், அப்பாவி மக்களை அவர்களின் மதம் பற்றி கேட்ட பிறகு பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றது, கொடுமையின் உச்சம்.
பஹல்காம் தாக்குதலுக்கு பின் காங்கிரஸ் கட்சியினர் 56 இன்ச் மார்பு எங்கே என்று என்னை எள்ளி நகையாடினர். இந்திய ராணுவம் கூறுவதை நம்ப மறுப்பவர்கள், பாகிஸ்தான் ராணுவம் கூறுவதை நம்புகிறார்கள்.
தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் கெஞ்சியதால் மட்டுமே சண்டையை நிறுத்த முடிவு செய்தோம். போரை நிறுத்தும்படி எந்த நாட்டு தலைவர்களும் இந்தியாவிடம் கூறவில்லை.
இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் முக்கிய ராணுவ விமான தளங்கள் பெரிதும் சேதமடைந்துள்ளது. குறிப்பாக ரஹீம் யார் கான் விமான தளம் இப்போது ICU வில் உள்ளது. பாகிஸ்தான் இன்னும் அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறது.
பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த ராணுவத்திற்கு முழு சுதந்திரம் தரப்பட்டது. இந்தியாவின் தயாரான ஏவுகணைகள் பாகிஸ்தானுக்குத் தக்க பாடத்தைப் புகட்டின. பாகிஸ்தான் அணுகுண்டு மிரட்டல் விடுத்தது. ஆனால், அதற்கு அஞ்சாமல் பதிலடி கொடுத்து அதனை மண்டியிட வைத்தோம்.
3 நாடுகள்
உலகில் உள்ள 193 நாடுகளில் 3 நாடுகள் மட்டுமே பாகிஸ்தானை ஆதரித்தது. உலகமே இந்தியாவை ஆதரித்த போது நமது ராணுவத்தை காங்கிரஸ் ஆதரிக்கவில்லை" என பேசினார்.
பாகிஸ்தானை ஆதரித்த 3 நாடுகளின் பெயர்களை பிரதமர் மோடி வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை என்றாலும், அவரது கருத்துக்கள் சீனா, துருக்கி மற்றும் அஜர்பைஜானை நோக்கி இருந்தது.
ஆபரேஷன் சிந்தூரின் போது, இந்த 3 நாடுகளும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக அறிக்கைகளை வெளியிட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |