100 நாள் வேலை திட்டத்தில் மோசடி - சிக்கிய கிரிக்கெட் வீரரின் குடும்பத்தினர்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளரான முகமது ஷமி(Mohammed Shami), 2025 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.
முகமது ஷமி தங்கை
இந்நிலையில், இவரது தங்கை மற்றும் தங்கை குடும்பத்தினர் மோசடியில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முகமது ஷமியின் தங்கை ஷபினாவின்(Shabina) மாமியார் குல் ஆயிஷா(Gul Aisha), உத்தரபிரதேச மாநிலம், பலோலா கிராமத்தின் கிராமத் தலைவராக உள்ளார்.
முன்னதாக அவரது மாமனார் ஷகில்(Shakil), தொடர்ந்து நான்கு முறை, பலோலா கிராமத் தலைவராக பதவி வகித்துள்ளார்.
இந்நிலையில், முகமது ஷமி தங்கை ஷபினா, அவரது கணவர் கஸ்னவி(Ghaznavi) மற்றும் அவரது 2 சகோதரர்கள் - எம்பிபிஎஸ் படிக்கும் அமீர் சுஹைல்(Aamir Suhail), வழக்கறிஞர் ஷேகு(Shekhu) ஆகியோர் 100 நாள் வேலைத்திட்டத்தில் (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் - MGNREGA) பயனாளிகளாக சேர்க்க பட்டுள்ளனர்.
MGNREGA திட்டத்தில் மோசடி
எந்த வேலையும் செய்யாமல், 2021 முதல் 2024 வரை இந்த திட்டத்தின் கீழ் வேலைபார்த்ததாக கூறி ஊதியமாக, ஷபினா 71,013 ரூபாயும், அவரது கணவர் கஸ்னவி ரூ.65,000, ஆமிர் சுஹைல் ரூ.63,851 ஷேகு ரூ.67,000 தங்களது வங்கி கணக்கில் பணம் பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு 2மாடி வீடும், லட்சக்கணக்கான மதிப்புள்ள விவசாய நிலமும் இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த முறைகேடுகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களது பெயர் பயனாளிகளின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.
ஆனால் அதிகாரிகள் மீது எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் அந்த பணமும் மீட்கப்படவில்லை.
இந்நிலையில், கடந்த மார்ச் 25 ஆம் திகதி இது குறித்து கிராமவாசி ஒருவர் அளித்த புகாரின் கீழ், இந்த சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைகேடாக பெற்ற பணத்தை மீட்க, அந்த வங்கிக்கணக்குகளை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், அப்போதைய கிராம மேம்பாட்டு அதிகாரி (VDO), உதவி திட்ட அதிகாரி (APO), கணினி ஆபரேட்டர் உள்ளிட்டோருக்கு இந்த முறைகேட்டில் பங்குள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து பதிலளித்த முகமது ஷமியின் சகோதரர் ஹசீப், "ஷபினாவின் குடும்பத்தில் என்ன நடக்கிறது என்பது தங்களுக்குத் தெரியாது. அதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, மோசடி குறித்து எதுவும் தெரியாது" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |