பார்வையாளர்கள் கண் முன்னே சர்க்கஸில் கர்ப்பிணியை கடித்துக் குதறிய கரடி... ஒரு திகில் வீடியோ
ரஷ்யாவில் சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்றின்போது, கர்ப்பிணிப் பெண் ஒருவரை கரடி ஒன்று கடித்துக் குதறும் காட்சி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பெண் அந்த கரடியின் பயிற்சியாளராம். ஆனால், அவர் கர்ப்பமுற்றதால் அவர் மீது கோபமுற்ற அந்த கரடி அவரைத் தாக்கியதாக அந்த பெண் தெரிவித்துள்ளார். தன் வயிற்றிலிருக்கும் குழந்தை மீதான பொறாமையால் அந்த கரடி அப்படி நடந்துகொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
வெளியாகியுள்ள வீடியோவில், ஆரம்பத்தில் அந்த பெண் பயிற்சியாளர் சொல்வது போல நடந்துகொள்ளும் அந்த கரடி, திடீரென அவர் மீது பாய்ந்து தாக்கத் தொடங்குகிறது. அதற்குள் அங்கிருந்த ஊழியர்கள் இருவர் அந்த கரடியை அந்த பெண்ணிடமிருந்து காப்பாற்ற முயல, அது அவரை விட மறுக்கிறது.
ஒரு வழியாக அந்த பெண்ணிடமிருந்து அந்த கரடியை மற்ற சர்க்கஸ் ஊழியர்கள் விலக்குவதைக் காணலாம்.
உடனடியாக அந்த பெண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆச்சரியப்படும் வகையில், அவருக்கு பெரிய அளவில் காயங்கள் எதுவும் இல்லை. அத்துடன், அவரது கருவிலிருந்த குழந்தைக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.
தற்போது அந்த கரடி சர்க்கஸ் நிகழ்ச்சிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.