கார் மற்றும் பேருந்து மீது மோதிய ட்ரக்... தீப்பிழம்பாகும் திகில் காட்சி
பிரேசிலில் ஒரு அபாயகரமான சாலை சந்திப்பில், கார் மற்றும் பேருந்தின்மீது ட்ரக் ஒன்று மோதி தீப்பிழம்பாகும் திடுக் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அபாயகரமாக வடிவமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலை ஒன்றின் குறுக்கே பேருந்து ஒன்று திரும்ப, அதைப் பின்தொடர்ந்து செல்ல கார் ஒன்று முயல்கிறது.
அப்போது நெடுஞ்சாலையில் வேகமாக வந்த எரிபொருள் கொண்டு செல்லும் ட்ரக் ஒன்று அந்த காரின் மீது மோத, கார் சாலையில் இழுத்துச் செல்லப்படுகிறது.
அப்போது சரியாக எதிரே ஒரு பேருந்து வர, ட்ரக்கால் இழுத்துச்செல்லப்பட்ட கார் பேருந்துக்கும் ட்ரக்குக்கும் நடுவில் சிக்கி பெரும் தீப்பிழம்பாக மாறுகிறது. காரின் சாரதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாக, அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததாலும், மேலும் வாகனங்கள் எதுவும் தொடர்ந்து வராததாலும்.பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
ட்ரக்கின் சாரதியும், பேருந்தின் சாரதியும் காயங்கள் எதுவுமின்றி தப்பியுள்ளார்கள்.
வெளியாகியுள்ள வீடியோவில், கார் மீது மோதிய ட்ரக் காரை இழுத்துச் செல்ல, பேருந்துக்கும் ட்ரக்குக்கும் நடுவே சிக்கி கார் குபீரென தீப்பிடிக்கும்போது மனம் பதறுவதை தவிர்க்க இயலவில்லை.