Monkeypox... உலகளாவிய சுகாதார அச்சுறுத்தல்: அறிவிக்கவிருக்கும் WHO
உலக நாடுகளில் குரங்கம்மை தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நிபுணர்களிடம் கலந்தாலோசித்து உலகளாவிய சுகாதார அச்சுறுத்தல் என அறிவிக்க WHO திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மொத்தம் 63 நாடுகளில் 9,200 பேர்களுக்கு இதுவரை குரங்கம்மை தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மன்றத்தின் சுகாதார முகமை அறிவித்துள்ளது. மட்டுமின்றி, இந்த ஆண்டு மே 6 முதல் ஜூலை 11 வரை இங்கிலாந்தில் மட்டும் 1,735 பேர்களுக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் பெரும்பாலானவர்கள் லண்டன் மக்கள் எனவும், மொத்தம் 1,229 பேர்களுக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக இங்கிலாந்தின் சுகாதார பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது.
குரங்கம்மை பரவல் தொடர்பில் WHO முன்னெடுக்கும் இரண்டாவது அவசர கூட்டம் இதுவென கூறப்படுகிறது. இதில் நிபுணர்களின் கருத்து ஆராயப்படும் எனவும், உலகளாவிய சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்த வேண்டுமா என்பது தொடர்பில் இறுதி முடிவெடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த முறை முன்னெடுக்கப்பட்ட கூட்டத்தில், அவசர நிலை பிரகடனம் செய்யும் வகையில் அச்சுறுத்தல் இல்லை என்றே கண்டறிந்தது. ஆனால் அதன் பின்னர் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க, சுகாதார முகமை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், வரும் நாட்கள் மற்றும் வாரங்களில் பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம் எனவும், கோடையில் பெரிய நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தாலோ அல்லது புதிய துணையுடன் உடலுறவு கொண்டிருந்தாலோ, குரங்கம்மை அறிகுறிகள் தொடர்பில் எச்சரிக்கையாக இருங்கள் என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இதனால் நீங்கள் விரைவாக பரிசோதனை செய்து, தொற்றுநோயைத் தவிர்க்க உதவலாம் எனவும் சுகாதார முகமை கேட்டுகொண்டுள்ளது. தற்போது வரையில் குரங்கம்மை உறுதி செய்யப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் தன்பால் ஈர்ப்பாளர்கள், இருபால் ஈர்ப்பாளர்கள் அல்லது ஆண்களிடம் பாலியல் உறவு வைத்துக்கொண்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் நெருக்கமான தொடர்பு வைத்துக் கொண்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.