குரங்கம்மை பரவல்... முக்கிய அறிவிப்பை வெளியிடவிருக்கும் ஜோ பைடன்
அமெரிக்காவில் குரங்கம்மை பரவல் நாளும் உச்சம் தொட்டுவரும் நிலையில் ஜோ பைடன் நிர்வாகம் சுகாதார அவசரநிலை பிரகடனம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் குரங்கம்மை தொடர்பில் முதல் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட சில மாதங்களில், மொத்த பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,639 என பதிவாகியுள்ளது.
இதனையடுத்து, ஜோ பைடன் நிர்வாகம் சுகாதார அவசரநிலை பிரகடனம் செய்ய உள்ளது. இதனால், சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் திணைக்களமானது போதுமான நிதியை அணுகலாம் மற்றும் இந்த விவகாரத்தை எதிர்கொள்ள அதிக பணியாளர்களையும் நியமிக்கலாம்.
சுகாதார அவசரநிலை பிரகடனமானது இந்த வார இறுதியில் இருக்கலாம் என்றே கூறப்படுகிறது. ஆனால் முடிவு இறுதி செய்யப்படவில்லை என்றே தெரிய வந்துள்ளது.
கடந்த மே 17 அன்று கனடாவில் இருந்து மாசசூசெட்ஸ் திரும்பிய ஒரு பயணிக்கு குரங்கம்மை தொற்று முதன் முறையாக உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், தற்போது நியூயார்க்கில் 1,228 பேர்களுக்கும், கலிபோர்னியாவில் 799 பேர்களுக்கும், இல்லினாய்ஸ் 385 பேர்களுக்கும், புளோரிடாவில் 332 பேர்களுக்கும் குரங்கம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக, குரங்கம்மை நோய் உள்ளவர்களுக்கு காய்ச்சல், வீங்கிய நிணநீர் கணுக்கள், தலைவலி மற்றும் தசைவலி போன்றவை ஏற்பட்டுள்ளன.