கோப முகம் காட்டும் நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன்: மக்களுக்கு ஒரு மாதம் கெடு
ஆயிரக்கணக்கான நியூசிலாந்து மக்களுக்கு கட்டாய தடுப்பூசிக்கான காலக்கெடுவை விதித்துள்ளதுடன், மீறுவோர் வேலையில் இருந்து நீக்கப்படும் ஆபத்தை எதிர்கொள்வார்கள் என பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் 40 சதவீத பணியாளர்களுக்கு நவம்பர் இறுதிக்குள் முழுமையாக தடுப்பூசி போட வேண்டும் என்று பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.
தலைமுடி திருத்துவோர், உணவகங்கள், மதுபான விடுதிகள், உடற்பயிற்சி கூடங்கள் உள்ளிட்டவைகளில் பணிபுரிவோர் குறித்த அறிவிப்பால் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றே தெரிய வந்துள்ளது.
வாடிக்கையாளர்களுடன் நெருக்கமாக புழங்குவோர் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்வதால் மட்டுமே, கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என பிரதமர் ஆர்டன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் பெரும்பாலானவர்கள் புழங்கும் பகுதிகளில் கொரோனா பரவல் கட்டுப்படும் எனவும் ஆர்டன் குறிப்பிட்டுள்ளார். வாடிக்கையாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடிவு செய்திருக்கும் நிலையில், ஏன் கடை ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் இருந்து விலக்கப்பட வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், மருத்துவர்கள், மருந்தக ஊழியர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் டிசம்பர் மாதத்திற்குள் முழுமையாக தடுப்பூசி போட வேண்டும், அதே நேரத்தில் ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஊழியர்களுக்கு ஜனவரி இறுதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அரசாங்கத்தை பொறுத்தமட்டில் தகுதியுடையவர்களில் 12 வயதுக்கும் மேற்பட்ட 90 சதவீத மக்களுக்கும் தடுப்பூசி அளிப்பதுடன், தேசிய ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றே போராடி வருகிறது.
மேலும், வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகளில் பொதுமக்களும் தடுப்பூசி சான்றிதழ்களை காண்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி இலக்குகளை அடைந்த பின்னரும் இதுபோன்ற கட்டுப்பாடு தேவையற்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் ஜூடித் காலின்ஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.