கனடாவில் இந்திய ஹொட்டல் உரிமையாளருக்கு ஏற்பட்ட நெருக்கடி
கனடாவின் மாண்ட்ரீல் பகுதியில் இந்தியரான ஹொட்டல் உரிமையாளர் ஒருவர் தமக்கு நேர்ந்த நெருக்கடியை பகிர்ந்துகொண்டுள்ளார்.
மாண்ட்ரீல் நகரத்தில் Saint-Laurent boulevard பகுதியில் அமைந்துள்ள ஹொட்டலை மூடும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக உரிமையாளரான சிமர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
அப்பகுதியில் சாலை தொடர்பான கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படுவதால், வேறுவழியின்றி தமது ஹொட்டலை மூடியாதாக ஆனந்த் குறிப்பிட்டுள்ளார்.
தமது வாடிக்கையாளர்கள் பலர் அப்பகுதியில் உணவருந்த முன்வருவதில்லை எனவும், இதனால் இழப்பை சந்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியை அடுத்து தமது ஹொட்டல் ஊழியர்களில் 9 பேர்களை வேலையில் இருந்து நீக்கும் நிலை ஏற்பட்டதாக ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இழப்பீடு கேட்டு மாண்ட்ரீல் நகர நிர்வாகத்தை அணுகினால், வெறும் 10 வாரங்கள் மட்டுமே அப்பகுதியில் பணிகள் நடப்பதாகவும், ஆறு மாதங்கள் வரையில் நீடித்தால் மட்டுமே இழப்பீடுக்கு தகுதி பெற முடியும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
கோடை காலத்தில் இந்த 10 வாரங்களில் தாம் எதிர்கொள்ளும் பொருளாதார இழப்பானது வருடத்தின் வேறு 6 மாதங்களில் எதிர்கொள்ளும் பாதிப்புக்கு நிகரானது என ஆனந்த் தெரிவித்துள்ளார்.