உலகப்போரில் ஏற்பட்ட உயிரிழப்பை விட கொரோனாவால் ஏற்பட்ட பலி அதிகம்! அமெரிக்கா வெளியிட்ட தகவல்
அமெரிக்காவில் உலகப்போர்களில் ஏற்பட்ட உயிரிழப்பை விட கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகம் என்று ஜனாதிபதி ஜோ பைடன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி கோடிக்கணக்கான உயிர்களை எடுத்து வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் இந்த கொரோனாவின் தாக்கம் பெரிய அளவில் உள்ளது.
அதுமட்டுமின்றி இந்த வைரஸ் புதிதாக உருமாறி, பிரித்தானியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, அவர் ஓராண்டுக்கு முன்னர் நாம் ஒரு வைரஸ் தொற்றால் தாக்கப்பட்டோம்.
அப்போது அந்தத் தொற்றத் தடுத்து நிறுத்தாமல் நாட்கணக்கில், வாரக்கணக்கில், மாதக்கணக்கில் மவுனம் காக்கப்பட்டது. அதன் விளைவு தொற்று பரவல், உயிர்ப்பலிகள், அழுத்தம், தனிமை. 2019-ல் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், வீடியோக்கள் பலரின் வாழ்க்கையில் நினைவுப் பொருளாக மாறியுள்ளது.
ஒவ்வொருவரின் துயரமும் சற்றே வித்தியாசமாக இருந்தாலும் நாம் அனைவருமே ஏதோ ஒரு வகையில் இழப்பை சந்தித்துள்ளோம். நாம் கூட்டத் துயரத்தை எதிர்கொண்டோம். 2020-ஆம் ஆண்டு உயிர்ப் பலிகள் நிறைந்த ஆண்டாக, நம் வாழ்வாதாரம் தொலைந்த ஆண்டாக அமைந்துவிட்டது.
ஆனால் அந்த நெருக்கடியிலும் நன்றிக்கடன், மரியாதை, பாராட்டுகள் என சில நல்ல விஷயங்களையும் பெற்றிருக்கிறோம். அமெரிக்கா எப்போதுமே இருளில் ஒளியைத் தேடும் உத்வேகம் கொண்ட நாடு. அமெரிக்காவில் கொரோனாவால் இதுவரை 5,27,726 பேர் பலியாகியுள்ளனர்.
இது, இரு உலகப் போர்கள், வியட்நாம் போர், செப்டம்பர் 11 தீவிரவாத தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் கூட்டுத்தொகையைவிட அமெரிக்காவில் கொரோனா பலி அதிகம்.
கொரோனா பலியால் மனைவியை இழந்த கணவர்கள், கணவனை இழந்த பெண்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், தாத்தா, பாட்டி, நண்பர்களை இழந்தோர் என நிறைய பேர் தனிமையில் விடப்பட்டுள்ளனர் இந்த நேரத்தில் நான் அவர்கள் அனைவரையும் நினைவு கூர்கிறேன் என்று கூறியுள்ளார்.
