கனடாவின் இரண்டு பெரிய நகரங்களிலிருந்து வெளியேறிய பல்லாயிரக்கணக்கான மக்கள்: காரணம் என்ன?
கடந்த ஆண்டில் கனடாவின் இரண்டு பெரிய நகரங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் வெளியேறியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று வெளியான அதிகாரப்பூர்வ தரவுகளிலிருந்து, கனடாவின் ரொரன்றோ மற்றும் மொன்றியலிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் வெளியேறி சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களைச் சென்றடைந்துள்ளது தெரியவந்துள்ளது.
2020ஆம் ஆண்டின் மத்தியிலிருந்து 2021ஆம் ஆண்டின் மத்தியப்பகுதி வரையில், 64,000க்கும் அதிகமானவர்கள் ரொரன்றோவிலிருந்து ஒன்ராறியோவின் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளார்கள்.
6,600 பேர் மாகாணத்தை விட்டே வெளியேறியுள்ளார்கள். கனடாவின் இரண்டாவது பெரிய நகரமான மொன்றியலிலோ, 40,000 பேர் கியூபெக்கின் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர, 3,600 பேர் மாகாணத்தைவிட்டே வெளியேறியுள்ளார்கள்.
கோவிடும், தொலைதூரம் சென்று வேலை பார்க்கவேண்டிய சூழல் அதிகரித்ததும், பல்லாயிரக்கணக்கானோரை, பெரிய மற்றும் விலைவாசி அதிகம் உள்ள நகரங்களிலிருந்து வெளியேறி, அதிக இட வசதியும், குறைவான வீட்டு விலையும் கொண்ட சிறிய நகரங்கள் மற்றும் கரையோரப்பகுதிகளைத் தேடிச் செல்லவைத்துவிட்டன.
ஆனால், இதனால் நாடு முழுவதும் வீடுகளின் விலை உயர, புறநகர்ப்பகுதிகளிலும் சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் வீடுகளின் விலை அதிகரித்ததால் முனிசிபாலிட்டிகளுக்கு அழுத்தம் நேரிடுமோ என்ற கவலை ஏற்படும் சூழல் உருவாயிற்று.
2020 மார்ச் மாதத்திற்குப் பின், வீடு ஒன்றின் விலை சுமார் 200,000 கனேடிய டொலர்கள் உயர்ந்து, தற்போது கனடா முழுவதிலும் வீடு ஒன்றின் விலை 780,400 ஆகியுள்ளது.
இதற்கிடையில், புலம்பெயர்தலால் ரொரன்றோவின் மக்கள்தொகை இழப்பு சற்று ஈடு செய்யப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.