கழிவுகளுடன் தரையிறங்கிய மேலும் 600 பலூன்கள்... அட்டூழியம் செய்யும் வடகொரியா
சிகரெட் துண்டுகள் முதல் பிளாஸ்டிக் வரை அனைத்தையும் உள்ளடக்கிய குப்பைகள் நிரப்பப்பட்ட சுமார் 600 பலூன்களை வடகொரியா அனுப்பியுள்ளதாக தென் கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.
கழிவுகள் நிரப்பப்பட்ட பலூன்
குறித்த பலூன் மூட்டைகளை தென் கொரிய பாதுகாப்பு அதிகாரிகள் சேகரித்து அப்புறப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை சுமார் 8 மணியில் இருந்தே தென் கொரியாவை நோக்கி கழிவுகள் நிரப்பப்பட்ட பலூன்களை வடகொரியா அனுப்பி வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை பகல் 10 மணி வரையில் சுமார் 600 பலூன்களை அடையாளம் கண்டுள்ளதாக தென் கொரிய தரப்பு தெரிவித்துள்ளது. மணிக்கு 20 முதல் 50 பலூன்கள் வரையில் அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
தென் கொரியாவின் தலைநகர் சியோல் மற்றும் கியோங்கியின் அருகிலுள்ள பகுதி உட்பட வடக்கு மாகாணங்களில் பலூன்கள் தரையிறங்கியுள்ளது. இது ஒட்டுமொத்தமாக தெற்கின் மக்கள்தொகையில் பாதியளவைக் கொண்டுள்ளது.
இந்த வார தொடக்கத்திலும் வடகொரியா இதுபோன்று குப்பை மற்றும் கழிவுகளுடன் பலூன்களை அனுப்பி வைத்துள்ளது. நேர்மையின் பரிசு என்றும், மேலும் இதுபோன்ற பலூன்கள் அனுப்பி வைக்கப்படும் எனவும் கூறியுள்ளது.
மனிதர்களுக்கு ஆபத்தான
வடகொரியாவின் இந்த செயலை கற்பனை செய்ய முடியாத சிறுமைத்தனம் மற்றும் மட்டமான நடத்தை என தென் கொரியாவின் பாதுகாப்பு அமைச்சர் Shin Won-sik விமர்சித்துள்ளார்.
இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என்றால், கடுமையான எதிர்வினையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார். செவ்வாய்க்கிழமையில் இருந்தே 900 பலூன்களை வடகொரியா அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
அதில் குப்பைகள் மட்டுமே இருந்துள்ளது என்றும், மனிதர்களுக்கு ஆபத்தான பொருட்கள் எதுவும் இல்லை என்றே தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, பலூன்களில் அனுப்பப்படும் கழிவுகளை மக்கள் எவரும் நெருங்க வேண்டாம் என்றும், அடையாளம் காண நேர்ந்தால் ராணுவம் அல்லது அருகாமையில் உள்ள பொலிசாருக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |