அதிக வரி விதிப்பு உறுதி... இந்தியாவை அடுத்து இன்னொரு நாட்டை மிரட்டும் ட்ரம்ப்
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்கு இந்தியா மீது முன்னர் அறிவிக்கப்பட்ட 25 சதவீத வரிகளைப் போலவே, சீனா மீது மேலும் வரிகளை அறிவிக்க முடியும் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கடுமையான வரி
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரவே, ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது வரி விதிப்பதாகவும் ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார். சீனா மீது வரி விதிப்பது உறுதி என்றும், ஆனால் எப்போது என்று உறுதியளிக்க முடியாது என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியா மீது 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ட்ரம்ப், அதே வரிசையில் சில நாடுகள் மீதும் கடுமையான வரி விதிக்கப்படும் என்றும், அதில் ஒரு நாடு சீனா என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய எண்ணெய் தொடர்ந்து வாங்குவதை காரணம் காட்டி, முன்னர் அறிவிக்கப்பட்ட 25 சதவீத வரிக்கு மேல், புதன்கிழமை இந்தியப் பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீத வரியை விதித்தார்.
ஆனால், அதிகமாக ரஷ்ய எண்ணெய் வாங்கும் சீனா தொடர்பில் வெள்ளை மாளிகை கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது. கடந்த வாரம் ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் சீனா மீது வரி விதிக்கப்படும் என்றே ட்ரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதிக விலைக்கு
இதே விவகாரத்தில் இந்தியா மீது வரி விதித்துள்ள ட்ரம்ப், சீனாவிற்கு அவகாசம் அளித்து வருகிறார். மட்டுமின்றி, ரஷ்ய எண்ணெய் வாங்கும் ஐரோப்பிய ஒன்றியம் குறித்தும் ட்ரம்ப் இதுவரை கருத்தேதும் தெரிவிக்கவில்லை.
ரஷ்யாவிடம் இருந்து பீப்பாய் ஒன்றிற்கு 65 டொலருக்கு எண்ணெய் வாங்கும் இந்தியா, அதை அண்டை நாடுகளுக்கு அதிக விலைக்கு விற்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.
தற்போது ட்ரம்பின் 50 சதவீத வரி விதிப்பால் தோல், ரத்தினங்கள், நகைகள் உட்பட முக்கிய ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும் என்றே இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |