உணவுக்காக திரண்ட மக்களில் 700 பேர்கள் படுகொலை... வெளிவரும் உண்மையான பின்னணி
கடந்த சில வாரங்களாக காஸா பகுதியில் உணவுக்காக கையேந்திய பாலஸ்தீன மக்களில் 700க்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்க ஆதரவு இஸ்ரேலிய இராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர்.
மக்கள் மீது துப்பாக்கிச் சூடு
சர்ச்சைக்குரிய அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ஆதரவு உதவித் திட்டத்திற்கு மீண்டும் கண்டனக் குரல் எழுந்துள்ளது.
காஸா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) சார்பாக முன்னெடுக்கப்பட்ட உணவு விநியோக தளங்களில் திரண்ட பாலஸ்தீன மக்களில் குறைந்தது 743 பேர்கள் கொல்லப்பட்டதாகவும், 4,891 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் காஸா சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை உறுதி செய்துள்ளது.
இந்த GHF அமைப்பானது மே மாத இறுதியில் குண்டுவீச்சுக்குள்ளான பாலஸ்தீனப் பகுதியில் செயல்படத் தொடங்கியது. ஆனால் அதன் ஒப்பந்ததாரர்களும் இஸ்ரேலியப் படைகளும் உதவி தேடும் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பல தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இது பரவலான விமர்சனங்களை ஈர்த்துள்ளது.
அமெரிக்க ஆதரவு நெதன்யாகு நிர்வாகத்தின் காஸா முற்றுகையால் ஏற்பட்ட கடுமையான பற்றாக்குறைக்கு மத்தியில், பாலஸ்தீன மக்கள் தங்கள் குடும்பங்களுக்கு உணவளிக்க தீவிரமாக முயற்சிக்கும் வேளையில், அந்த மக்கள் மீது தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நெதன்யாகு நிர்வாகத்தின் கடும்போக்கு நடவடிக்கைகளால் பெரும்பாலான பாலஸ்தீன குடும்பங்கள் சாப்பிடும் நிலையில் இல்லை. இங்குள்ள தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதால், தங்களுக்கான உணவைத் தவிர்க்கிறார்கள்.
இந்த வாரத் தொடக்கத்தில் அமெரிக்க ஒப்பந்ததாரர்கள் GHF உணவு விநியோக தளங்களில் திரண்ட பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று உறுதி செய்துள்ளது.
மனிதாபிமானமற்ற
பெயர் குறிப்பிட விரும்பாத இரண்டு அமெரிக்க ஒப்பந்ததாரர்கள் AP செய்தி நிறுவனத்திடம் தெரிவிக்கையில், ஆயுதம் ஏந்திய ஊழியர்கள் தாங்கள் விரும்பியதைச் செய்வது போல் தோன்றியதாகக் கூறினர்.
ஆனால் GHF அமைப்பு முற்றாக அந்த செய்தியை மறுத்தது. மேலும், ஜனாதிபதி ட்ரம்பின் நிர்வாகம் மொத்தம் GHF அமைப்பை முழுமையாக ஆதரிக்கிறது. ஜூன் மாத இறுதியில், GHF அமைப்புக்கு 30 மில்லியன் டொலர் நிதியுதவி அளிப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்தது.
இதனிடையே, GHF அமைப்பை உடனடியாக மூட வேண்டும் என்று முன்னணி மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் குழுக்கள் கோரியுள்ளன.
மட்டுமின்றி, தினசரி துப்பாக்கிச் சூடு மற்றும் பெருமளவிலான உயிரிழப்புகளை எதிர்கொள்ளும் நெரிசலான, இராணுவமயமாக்கப்பட்ட மண்டலங்களுக்கு இரண்டு மில்லியன் மக்களை கட்டாயப்படுத்தி திரட்டியதாக குற்றம் சாட்டினர்.
GHF அமைப்பின் நடவடிக்கைகள் அனைத்தும் மனிதாபிமானமற்ற மற்றும் கொடிய இராணுவமயமாக்கப்பட்டதாக இருப்பதாக அம்னஸ்டி இன்டர்நேஷனல் விவரித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |