6.6 கோடி ஆண்டுகள் சிந்தாமல் சிதறாமல் புதைந்திருந்த டைனோசரின் முட்டை கரு!
முட்டையிலிருந்து குஞ்சு பொறிந்து வெளியே வரத்தயாராக நிலையில் ஒரு டைனோசர் முட்டை கரு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அந்த டைனோசர் முட்டைக்கரு கச்சிதமாக சிந்தாமல் சிதறாமல் புதைந்திருந்தது என்றும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
தெற்கு சீனாவில் உள்ள கான்சூவில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த டைனோசர் முட்டைக்கரு குறைந்தபட்சம் 66 மில்லியன் (6.6 கோடி) ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அக்கரு பல் இல்லாத தெரொபாட் சைனோசர் அல்லது ஓவிரப்டொரொசராக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அக்கருவுக்கு பேபி யிங்லியாங் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
"இதுதான் இதுவரை வரலாற்றில் கண்டுபிடிக்கப்பட்ட அருமையான டைனோசர் முட்டைக்கரு" என ஆராய்ச்சியாளர் டாக்டர் ஃபியான் வைசும் மா கூறினார்.
டைனோசர்களுக்கும், நவீன கால பறவைகளுக்கும் இடையிலான தொடர்பு குறித்த புரிதலை ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த கண்டுபிடிப்பு வழங்குகிறது. கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் முட்டைக்கரு புதை படிமத்தில், இந்தக் கரு, கை கால்களுக்கு கீழ் தலையை வைத்து சுருட்டிக்கொண்டு இருக்கிறது. பறவைகளின் முட்டையில்தான் குஞ்சு பொறிப்பதற்கு முன் இப்படி நடக்கும்
"நவீன பறவைகளுக்கு மத்தியில் காணப்படும் இது போன்ற நடவடிக்கைகள் முதலில் அதன் மூதாதையர்களான டைனோசர்களிடம் தோன்றி மேம்பட்டதைக் காட்டுகிறது" என டாக்டர் மா ஏ.எஃப்.பி முகமையிடம் கூறினார்.
ஓவிரப்டொரொசர் என்றால் முட்டைகளைத் திருடும் பல்லிகள் என்று பொருள். தற்போது ஆசியா மற்றும் வட அமெரிக்கா என்றழைக்கப்படும் பகுதிகளில், 100 மில்லியன் முதல் 66 மில்லியன் (10 கோடி முதல் 6.6 கோடி) ஆண்டுகளுக்கு முன், இறக்கைகள் கொண்ட இந்த டைனோசர்கள் இருந்தன.
பூமியில் உள்ள உயிரினங்கள் குறித்து புதைபடிமங்களைக் கொண்டு ஆராயும் நிபுணர் பேராசிரியர் ஸ்டீவ் ப்ருசட் என்பவரும் இந்த ஆராய்ச்சியில் இடம்பெற்றிருந்தார். தான் கண்டுபிடித்த அற்புதமான டைனோசர் புதைபடிமங்களில் இதுவும் ஒன்று என்கிறார் அவர். அந்த டைனோசர் முட்டைக்கரு, பொறிந்து வெளியே வரும் நிலையில் இருந்தது என அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Our little one has just arrived. Welcome Baby Yingliang, a gorgeous fossil dinosaur embryo preserved inside its egg!
— Steve Brusatte (@SteveBrusatte) December 21, 2021
You're looking here at a baby dinosaur, not too long before it would have hatched. pic.twitter.com/NtXE8XODjT
பேபி யிங்லியாங் தலை முதல் வால் வரை 10.6 இன்ச் நீளம் கொண்டதாக உள்ளது. அந்த உயிரினம் 6.7 இன்ச் நீள முட்டையில், சீனாவில் உள்ள யிங்லியாங் ஸ்டோன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் இருக்கிறது.
இந்த முட்டை முதன்முதலில் 2,000ஆம் ஆண்டு வெளிக்கொணரப்பட்டது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு பத்திரமாக பாதுகாத்து வைக்கப்பட்டது.
அருங்காட்சியகத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்கிய போது, பழைய புதைபடிமங்கள் பிரித்து வைக்கப்பட்டன. அப்போதுதான் இந்த முட்டை குஞ்சு பொறிக்கும் நிலையில் கருவோடு இருக்குமோ என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் ஆராய்ச்சியாளர்கள் கவனம் இந்த டைனோசர் முட்டை மீது திரும்பியது.
டைனோசரின் ஒரு பகுதி உடல் பாறைகளால் மறைக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் அதிநவீன ஸ்கேனிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டைனோசரின் முழு உடலமைப்பை வெளிப்படுத்தும் எலும்புக் கூட்டின் படத்தை உருவாக்கி உள்ளனர்.