காதலனை திருமணம் செய்ய நினைத்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த நிலை! புதரில் வீசிய கொடூரம்
தமிழத்தில் இளம்பெண்ணை அவர் காதலனே நண்பருடன் சேர்ந்து கொலை செய்த சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையம் அருகே உள்ள வாகரையில் சாலையோரத்தில், கடந்த 5ம் திகதி 20 வயது இளம்பெண் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்த பெண், ஜெயஸ்ரீ (20) என்று தெரியவந்தது. இவர், வடமதுரை அருகே உள்ள தென்னம்பட்டி இந்திராநகரை சேர்ந்த கொத்தனார் கதிர்வேல் என்பவரின் மகள் ஆவார்.
இந்தநிலையில் ஜெயஸ்ரீயின் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதற்கு அவரது செல்போனை துருப்புச்சீட்டாக பயன்படுத்தினர்.
அதாவது ஜெயஸ்ரீயிடம் செல்போனில் யார்? யார்? பேசி உள்ளனர் என்ற பட்டியலை பொலிசார் சேகரித்தனர். அப்போது, பழனி அருகே உள்ள கோம்பைபட்டியை சேர்ந்த தங்கதுரை (25) என்பவர் ஜெயஸ்ரீயிடம் அதிக நேரம் பேசி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தங்கதுரையை பிடித்து விசாரித்ததில் பகீர் தகவல் வெளியானது.
பழனி அருகே உள்ள கோம்பைபட்டி கிராமத்தை சேர்ந்த தங்கதுரை, தனியார் நூற்பாலையில் தங்கி பணிபுரிந்து வந்த நிலையில் அதே நிறுவனத்தில் ஜெயஸ்ரீயும் பணிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் இருவருக்கும் காதல் மலர்ந்தது பின்பு இருவரும் விடுமுறை நாட்களில் தனியாக சந்தித்து பழகியுள்ளனர். இந்த காதல் கடந்த ஆறுமாத காலமாக மலர்ந்த நிலையில் தற்போது ஜெயஸ்ரீ தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வந்துள்ளார்.
சாதியை காரணம் காட்டி திருமணத்திற்கு மறுத்த தங்கதுரை, தன்னை திருமணம் செய்து கொள்ள ஜெயஸ்ரீ வற்புறுத்துவதாக அவரது வீட்டிற்கு போன் செய்ததால், ஜெயஸ்ரீயை பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதனிடையே 31ம் திகதி அன்று இரவு தங்கதுரைக்கு தெலைபேசியில் தொடர்பு கொண்ட ஜெயஸ்ரீ, மறுநாள் அங்கு வருவதாகவும், தன்னை அழைத்து சென்று திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கடந்த 1ம் திகதி மாலை ஒட்டன்சத்திரத்திற்கு பேருந்தில் வந்த ஜெயஸ்ரீயை, இருசக்கர வாகனத்தில் வந்த தங்கதுரை மற்றும் அவருடன் பணிபுரியும் கூட்டாளி ஜெகநாதன் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளனர்.
மூவரும் கள்ளிமந்தையம் அருகே உள்ள தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனத்திற்கு பின்புறம் வைத்து காதலை முறிப்பது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்ற ஆத்திரமடைந்த தங்கதுரையும் அவரது கூட்டாளியும் சேர்ந்து ஜெயஸ்ரீயின் கழுத்தை நெரித்து கொலை செய்து அங்கேயே ஒரு புதரில் உடலை மறைத்து வைத்து விட்டு தப்பியது விசாரணையில் அம்பலமானது.
இதை தொடர்ந்து தங்கதுரை மற்றும் ஜெகநாதனை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
