வெளிப்படையான போரைத் தூண்டுவதாக ஐரோப்பிய நாடொன்றை குற்றஞ்சாட்டிய ரஷ்யா
Moscow accuses Estonia of hostile actions: எஸ்தோனியா விரோதமான செயல்களில் ஈடுபடுவதாக ரஷ்யா குற்றம் சாட்டுகிறது.
நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடான எஸ்தோனியா, வெளிப்படையான போரைத் தூண்டும் விளிம்பில் உள்ள பல விரோதச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
ஆபத்தான செயல்கள்
எஸ்தோனியா தனது நில எல்லையை மூடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, ரஷ்யா தனது விமர்சனங்களைக் கடுமையாக்கியுள்ளது.

எஸ்தோனியாவின் ஆயுதத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் மீது ரஷ்யப் பாதுகாப்புப் பிரிவினர் தீவைக்க முயற்சி செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ள எஸ்தோனியா, டிசம்பர் 1 முதல் ரஷ்யாவுடனான எல்லைக் கடக்கும் இடங்களை குறைந்தது ஆறு மாத காலத்திற்கு மூடத் திட்டமிட்டுள்ளது.
ஆனால், அப்படியான ஒரு முயற்சி ரஷ்யா முன்னெடுக்கவில்லை என அதிகாரிகள் தரப்பில் மறுத்துள்ளனர். எஸ்தோனியா தனது எல்லையை மூடுவதாக எடுத்த முடிவுக்கு எதிராக, மாஸ்கோவில் உள்ள அந்த நாட்டின் தூதரகப் பொறுப்பாளரை அழைத்து அதிகாரப்பூர்வ கண்டனத்தைத் தெரிவித்த ரஷ்ய அமைச்சகம், அதன் பிறகு வெளியிட்ட அறிக்கையில் தனது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
இத்தகைய ஆத்திரமூட்டும் மற்றும் மிகவும் ஆபத்தான செயல்கள் ரஷ்யாவுடன் ஒரு நேரடிப் போரைத் தூண்டும் விளிம்பில் உள்ளன என்று எஸ்தோனிய தூதரகப் பொறுப்பாளருக்கு மீண்டும் ஒருமுறை தெரிவிக்கப்பட்டது என ரஷ்ய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குற்றச்சாட்டுகளின் வரிசையில், ரஷ்ய இலக்குகளைத் தாக்குவதற்காக உக்ரைன் தனது வான்வெளியைப் பயன்படுத்த எஸ்தோனியா ரகசியமாக அனுமதித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், பால்டிக் கடலில் ரஷ்ய சரக்குக் கப்பல்களின் நடமாட்டத்திற்குத் தடையை ஏற்படுத்த முயன்றது, ரஷ்ய மற்றும் பெலாரஷ்ய தானியங்களின் போக்குவரத்தைத் தடை செய்தது, ரஷ்ய மொழிக்குத் தடை விதிக்க முற்பட்டது மற்றும் ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தை மூட்டிவிடுவோம் என்று அச்சுறுத்தியது என எஸ்தோனியா மீது ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், ரஷ்யாவின் தேசிய நலன்களையும் அதன் குடிமக்களின் சட்டபூர்வ உரிமைகளையும் பாதுகாக்கும் நோக்கில், விரிவான அரசியல் மற்றும் தூதரக நடவடிக்கைகளை எடுக்கும் உரிமையை ரஷ்ய தரப்பு கொண்டிருக்கிறது என்றும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், எஸ்தோனிய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ரஷ்யாவால் முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிக்கவில்லை; அதேவேளையில், உக்ரேனிய ராணுவ நடவடிக்கைகளுக்காகத் தனது நிலப்பரப்பைப் பயன்படுத்த அனுமதிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அது மறுத்தது.
அனுமதிக்கப்போவதில்லை
பொதுவாக ரஷ்யாவின் பிரச்சாரக் கதையாடல்கள் குறித்து நாங்கள் கருத்து தெரிவிப்பதோ அல்லது அவற்றில் ஈடுபடுவதோ இல்லை என்றாலும், இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை, எஸ்தோனியா தனது நிலப்பரப்பை வேறொரு நாட்டின் ராணுவ நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்த ஒருபோதும் அனுமதித்ததில்லை, இனியும் அனுமதிக்கப்போவதில்லை என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மட்டுமின்றி, தங்கள் பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளும் இந்த நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளன என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஐரோப்பிய பாதுகாப்பைக் குலைக்கும் தனது சொந்தச் செயல்களிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப, எஸ்தோனியாவுக்கு எதிரான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ரஷ்யா ஊடகங்கள் வாயிலாகப் பரப்பி வருகிறது என்று எஸ்தோனிய வெளிவிவகார அமைச்சர் மார்கஸ் சாஹ்னா சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

பால்டிக் பிராந்தியத்தில் உள்ள எஸ்தோனியா மற்றும் பிற நேட்டோ நாடுகள், உக்ரேனிய ட்ரோன்களை தங்கள் வான்வெளியைப் பயன்படுத்த அனுமதிப்பதாக ரஷ்யா நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகிறது.
உக்ரேனிய ட்ரோன்கள் அடிக்கடி நேட்டோ வான்வெளிக்குள் நுழைந்துள்ளன, இது ரஷ்யாவின் சிக்னல் ஜாமிங்கின் விளைவு என்று உக்ரைன் விளக்கமளித்துள்ளது.
நேட்டோ நாடுகள், தங்களது வான்வெளியில் ட்ரோன்களை வேண்டுமென்றே பயன்படுத்த அனுமதித்ததை தொடர்ச்சியாக மறுத்துள்ளன. மேலும், 2022-ல் உக்ரைனுடன் போரைத் தொடங்கியதற்காக ரஷ்யாவை இந்த ஊடுருவல்களுக்குக் குற்றம் சாட்டியுள்ளன.