மாஸ்கோ கலை அரங்க தாக்குதல்: 9 பேரை தஜிகிஸ்தானில் கைது செய்த ரஷ்யா
கடந்த வாரம் மாஸ்கோவில் உள்ள கலை அரங்கில் நடந்த கொடூர தாக்குதலுடன் தொடர்புடையதாக கருதப்படும் ஒன்பது பேரை தஜிகிஸ்தானில் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மாஸ்கோ தாக்குதல்
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் மார்ச் 22 ஆம் திகதி நடந்த குரோகஸ் நகர அரங்க தாக்குதலில்(Crocus City Hall) குறைந்தது 144 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ்-கே(ISIS-K) என்ற பயங்கரவாத குழு பொறுப்பேற்று கொண்டுள்ளது.
இதற்கிடையில் இந்த சம்பவத்துடன் தொடர்பாக 11 சந்தேக நபர்களை ரஷ்யா கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதில் நால்வர் தாக்குதலுக்கு நேரடியாக காரணமாக இருந்தவர்கள் என கருதப்படுகிறார்கள்.
மேலும் 9 பேர் கைது
இந்நிலையில், தஜிகிஸ்தானின் மாநில பாதுகாப்பு குழு, தஜிகிஸ்தானின் கிழக்கு மாவட்டமான வாக்ஹடடில் 9 சந்தேக நபர்களை கைது செய்துள்ளது என ரஷ்ய அரசு ஊடகமான ரியா நோவோஸ்டி செய்தி நிறுவனத்திடம், தஜிகிஸ்தான் சிறப்புப் படையின் பெயர் வெளியிடப்படாத அதிகரி ஒருவர் தகவல் வழங்கியுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் தாக்குதலாளர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படுவதாகக் கூறினார்.
மேலும், கைது நடவடிக்கையில் ரஷ்ய பாதுகாப்பு படையினர் ஒத்துழைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் தலைநகரான துஷன்பேயில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் ISIS-K என்ற பயங்கரவாத குழுமத்துடன் இணைந்திருப்பதாக நம்பப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |