இரத்த வங்கி உட்பட மருத்துவ முகாம்: உக்ரைன் எல்லையில் ரஷ்யா அதிரடி நகர்வு
உக்ரைன் -ரஷ்யா மோதல் போக்கு இறுகி வரும் நிலையில், உக்ரைன் எல்லையில் இரத்த வங்கி உட்பட மருத்துவ முகாம்களை ரஷ்யா அமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் இந்த நகர்வு உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு அபாயத்தை இன்னும் உறுதி செய்வதாகவே பார்க்கப்படுது. ரஷ்யா மருத்துவ முகாம்கள் அமைப்பதை மூன்று அமெரிக்க இராணுவ அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி, உக்ரைன் தலைநகரை கைப்பற்றுவதற்கு ரஷ்யாவுக்கு வெறும் 48 மணி நேரம் மட்டுமே போதுமானது எனவும், அதற்குரிய இராணுவ பலம் ரஷ்யாவிடம் உள்ளது எனவும் நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.
பொதுவாக போர் காலங்களிலேயே இராணுவ முகாம்களில் மருத்துவ முகாம்களும் இணைக்கப்படும். மட்டுமின்றி குளிர்சாதனப் பெட்டிகளில் 14 நாட்கள் மட்டுமே இரத்தம் பாதுகாக்க முடியும். ஆனால், அமெரிக்க இராணுவ அதிகாரிகள் குறிப்பிடுகையில், இந்த வாரத்திலேயே ரஷ்யா இரத்த வங்கிக்கான ஆயத்தங்களை முன்னெடுத்துள்ளதாகவும், இரத்தமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பென்டகன் உயர் அதிகாரிகளில் ஒருவரான ஜெனரல் மார்க் மில்லி, உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு கண்டிப்பாக அதிக உயிரிழப்பையும் இரத்தக்களரியையும் ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள இராணுவம் மற்றும் போர் தளவாடங்கள் தொடர்பில் வெளியாகும் தகவல், உண்மையில் பனிப்போர் காலத்திற்கு பிறகு வெளியாகும் அச்சமூட்டும் சம்பவம் என்றார்.
ரஷ்ய ஜனாதிபதி புடின் இவ்வாறான ஒரு முடிவை முன்னெடுப்பார் என்பது சந்தேகமே என்கிறார் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின்.
புடின் முன்னால் பல்வேறு தெரிவுகள் இருக்கையில், உலக நாடுகளின் எதிர்ப்பை சம்பாதிக்கும் வகையில் நடந்து கொள்ள வாய்ப்பில்லை எனவும் லாயிட் ஆஸ்டின் குறிப்பிட்டுள்ளார்.