கொசுவர்த்தியால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு நேர்ந்த துயரம்
தமிழக மாவட்டம் செங்கல்பட்டில் கொசுவர்த்தி சுருளால் ஏற்பட்ட தீ விபத்தில், குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.
கொசுத்தொல்லை
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த கன்னிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன்(33). இவர் தனது மனைவி ஜெயசித்ரா (29), மகள் ஜெயஸ்ரீ ஆகியோருடன் வசித்து வந்தார்.
இவர்கள் இருக்கும் பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக இருந்த காரணத்தினால், பணி முடிந்து வீடு திரும்பிய பார்த்திபன் கொசுவர்த்தி சுருளை ஏற்றி வைத்துவிட்டு தூங்க சென்றதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து கொசுவர்த்தி சுருள் அருகில் இருந்த துணிகள் அல்லது ஏதோ ஒரு பொருளின் மீது விழுந்துள்ளது. அதன் பின்னர் தீப்பற்றி வீடு முழுவதும் புகை மூட்டமாகியுள்ளது. மேலும் தீயும் பரவ, அறை முழுவதும் நச்சுப்புகை ஆக்கிரமித்தது.
இதனால் வீட்டில் இருந்தவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட, தப்பிக்க வழி இல்லாததால், பார்த்திபன் உட்பட மூவரும் உடல் கருகி அங்கேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
உடல்கள் மீட்பு
அதன் பின்னர் வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறுவதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்பு படையின் வீட்டினுள்ளே சென்று தீயை அணைத்தனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களும் மீட்கப்பட்டன.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார், விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |