பூமியிலேயே வாழத்தகுதியற்ற நகரம்... ஆண்டில் 45 நாட்கள் இருளில்: வெளிவராத துயரம்
சாலை மார்கம் நெருங்க முடியாத பூமியிலேயே வாழத்தகுதியற்ற நகரம் என அறியப்படும் ரஷ்யாவின் நோரில்ஸ்க் நகரம் மீண்டும் ஊடக வெளிச்சம் கண்டுள்ளது.
ரஷ்யாவின் சுரங்க நகரமாக அறியப்படும் நோரில்ஸ்க் ஆண்டில் 45 நாட்கள் மொத்தமாக இருளில் மூழ்கிவிடும் எனவும், சில்லிட வைக்கும் மிக மோசமான கடந்த காலம் இந்த நகரத்திற்கு இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கிழக்கு ரஷ்யாவில் சுமார் 170.000 மக்கள் குடியிருக்கும் இந்த நகரமானது சைபீரியா பிராந்தியத்தில் அமைந்துள்ளது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலிருந்து 1,800 மைல்கள் தொலைவிலும், பிராந்திய தலைநகர் க்ராஸ்நோயார்ஸ்கிலிருந்து வடக்கே 930 மைல்களுக்கு அப்பாலும் அமைந்துள்ளது நோரில்ஸ்க் நகரம்.
சாலை வசதி ஏதுமற்ற இந்த நகரத்தில் ஒரே ஒரு சரக்கு ரயில் மட்டும் செயல்பட்டு வருகிறது. 2017ல் தான் நோரில்ஸ்க் நகரத்தில் தரமான இணைய வசதி கொண்டுவரப்பட்டது. சோவியத் காலகட்டத்து சிறை முகாமில் விமானம் தரையிறங்க வசதி செய்யப்பட்டுள்ளது. மாஸ்கோவிலிருந்து 5 மணி நேர பயணம்.
20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஒரு புவியியலாளர் புடோரானா மலைகளின் அடிவாரத்தில் நிக்கல், தாமிரம் மற்றும் கோபால்ட் ஆகியவற்றின் வளமான புதையலைக் கண்டுபிடித்தார்.
1936ல் சோவியத் அரசு சிறை கைதிகள் 500,000 பேர்களை பயன்படுத்தி இப்பகுதியில் சுரங்க கட்டுமான பணிகளை துவங்கியது. 20 ஆண்டுகள் நீடித்த கட்டுமான பணியில், சுமார் 18,000 பேர்கள் பலியாகினர்.
இன்று, உலகின் நிக்கலில் ஐந்தில் ஒரு பங்கும், உலக அளவில் பல்லேடியத்தில் பாதிக்கும் மேற்பட்டவையும் நோரில்ஸ்கிலிருந்து வருகிறது. இங்குள்ள பெரும்பாலான மக்கள் நிக்கல் தொழிற்சாலையில் நேரிடையாகவோ மறைமுகமாகவோ பணியாற்றி வருகின்றனர்.
நோரில்ஸ்க் இன்று ரஷ்யாவில் மிகவும் மாசுபட்ட நகரமாகும், மேலும் பூமியில் முதல் பத்து மாசுபட்ட நகரங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும், இங்குள்ள நிக்கல் ஆலையில் இருந்து சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள், கார்பன், பீனால்கள் உள்ளடக்கிய இரண்டு மில்லியன் டன்களுக்கும் அதிகமான நச்சு வாயு வெளியேறுகிறது.
வருடத்தில் மூன்றில் இரண்டு பங்கு நோரில்ஸ்க் நகரமும் அதன் சுற்றுப்புறமும் பனியால் மூடப்பட்டிருக்கும். இங்குள்ள நிக்கல் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் மாதம் 800 பவுண்டுகளுக்கும் அதிகமாக ஊதியம் பெறுகின்றனர். ஆனால் தேசிய சராசரி 600 பவுண்டுகளுக்கும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.