கத்தார் கோரிக்கைக்கு பணிந்த ஹமாஸ்... பணயக்கைதியான தாயாரும் மகளும் விடுவிப்பு
கத்தார் முன்னெடுத்த பேச்சுவார்த்தைகளின் பலனாக ஹமாஸ் படைகளிடம் பணயக்கைதியாக இருந்த தாயாரும் மகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஸாவில் பணயக்கைதி
அமெரிக்காவின் சிகாகோ நகரை சேர்ந்த தாயாரும் மகளும் அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலின் போது கைப்பற்றப்பட்டு காஸாவில் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டனர்.
@reuters
தற்போது கத்தார் முன்னெடுத்த முயற்சிகளின் பலனாக இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். 17 வயதான Natalie Raanan மற்றும் அவரது தாயார் Judith ஆகியோர் ரஃபா எல்லை வழியாக எகிப்திற்கு அனுப்பப்பட்டனர்.
அங்கே இஸ்ரேலிய அதிகாரிகளை சந்தித்துள்ளனர். குறித்த தகவலை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் ஒரு அறிக்கை ஊடாக தெரிவித்துள்ளது.
அந்த தாயாரும் மகளும் இஸ்ரேல் ராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். இருவரும் இஸ்ரேலிய குடியுரிமை கொண்டவர்கள் என்றே கூறப்படுகிறது.
@ap
அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் படைகள் முன்னெடுத்த கண்மூடித்தனமான தாக்குதலில், 1,400 பேர்கள் கொல்லப்பட்டதுடன், 200 பேர்களுக்கும் அதிகமானோரை ஹமாஸ் படைகள் பணயக்கைதிகளாக காஸாவில் வைத்துள்ளது.
பொய்யானவை, ஆதாரமற்றவை
விடுமுறை நாட்களை கொண்டாடும் வகையில் அந்த தாயாரும் மகளும் இஸ்ரேலுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இருவரும் விடுவிக்கப்பட்டுள்ள தகவலை அறிவித்துள்ள ஹமாஸ் செய்தித்தொடர்பாளர்,
கத்தார் முன்னெடுத்த பேச்சுவார்த்தையின் பலனே இந்த விடுவிப்பு எனவும், அத்துடன் மனிதாபிமான காரணங்களுக்காகவும், ஜோ பைடன் மற்றும் அவரது பாசிச நிர்வாகத்தின் கூற்றுக்கள் பொய்யானவை, ஆதாரமற்றவை என்பதை அமெரிக்க மக்களுக்கும் உலகிற்கும் நிரூபிக்கவே இந்த முடிவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
@getty
இதனிடையே, அமெரிக்க குடிமக்கள் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும், எஞ்சியவர்களை விடுவிக்கவும் தமது முயற்சிகள் தொடரும் என்றார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்.
இந்த நிலையில், அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்கும் நம்பிக்கையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் உடனான பேச்சுவார்த்தையை தொடர இருப்பதாக கத்தார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |