6 வயது மகனை கழிவறையில் வைத்து... பின்னர் பொலிசாருக்கு தகவல் அளித்த கர்ப்பிணி தாயார்
இந்திய மாநிலம் கேரளாவில் 6 வயதேயான சொந்த மகனை தாயாரே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் குடும்பத்தாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் ஷாகிதா என்பவரே தமது மூன்றாவது மகன் ஆமில் என்பவரை கழிவறையில் வைத்து கொலை செய்துள்ளார்.
சமையலறை கத்தியால் சிறுவனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள ஷாகிதா, பின்னர் பக்கத்து வீட்டாரிடம் இருந்து பெற்ற காவல்துறையினரின் அவசர தொடர்பு இலக்கத்திற்கு தகவல் அளித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 4 மணியளவில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.
மூன்று மாதம் கர்ப்பிணியான ஷாகிதாவின் இச்செயல் குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சம்பவத்தின்போது கணவர் சுலைமான் குடியிருப்பில் இல்லை என கூறப்படுகிறது. மேலும் ஷாகிதாவுக்கு ஏதும் உளவியல் பிரச்சனை இருப்பதாக தெரியவில்லை எனவும் சுலைமான் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
ஷாகிதா அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த பொலிசார், உடனடியாக அவரை கைது செய்துள்ளனர்.
விரிவான விசாரணைக்கு பின்னரே, கொலைக்கான காரணம் மற்றும் ஷாகிதாவின் உடல் நலம் தொடர்பில் தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது.