மலைச் சிங்கத்துடன் மோதி பெற்ற குழந்தையை காப்பாற்றிய வீரத்தாய்! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
அமெரிக்காவில் மலைச் சிங்கத்துடன் வெறும் கையில் போராடி தனது 5 வயது மகனை ஒரு தாய் காப்பாற்றியுள்ளார்.
குறித்த சம்பவம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் மலைகள் சூழ்ந்த Calabasas நகரத்தில் நடந்துள்ளது.
இது குறித்து கலிபோர்னியாவின் மீன் மற்றும் வனவிலங்கு துறை அதிகாரிகள் தெரிவித்தபோது, சுமார் 30 கிலோ எடை கொண்ட மலைச் சிங்கம் ஒன்று, வீட்டின் வாசலில் விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுவனை கடித்து 135 அடி தூரத்திற்கு இழுத்துச் சென்றது.
இதைப்பார்த்த சிறுவனின் தாய், சற்றும் யோசிக்காமல் மலைச்சிங்கத்தை தனது வெறும் கைகளால் குத்தி, தனது மகனை போராடி மீட்டுள்ளார்.
அப்பெண்ணின் அடியை தாங்கமுடியாத அந்த மலைச் சிங்கம் திரும்பி தாக்க முடியாமல் அங்கிருந்து ஓடியது.
பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு தலை மற்றும் மேல் உடற்பகுதியில் பல அதிர்ச்சிகரமான காயங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால், அவர் தற்போது லாஸ் ஏஞ்சலஸ் மருத்துவமனையில் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்ஏ சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் சிறுவனை தாக்கியது மலைச் சிங்கம் தான் என்பதை உறுதி செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, அப்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் சுற்றித்திரிந்த மற்றோரு மலைச் சிங்கத்தை வனத்துறையினர் பிடித்து, சோதனை செய்து, மீண்டும் காட்டுக்குள் விட்டுள்ளனர்.