19 வயது மகளுக்காக வெளிநாட்டிற்கு சென்று உழைத்த தாயார்! மகள் இறுதிச்சடங்கிற்கு ஊர் திரும்பிய பரிதாபம்... எச்சரிக்கை செய்தி
வெளிநாட்டில் வேலை செய்யும் தாயாருக்கு தனது 19 வயது மகள் உள்ளூரில் உயிரிழந்த செய்தி பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தமிழகத்தின் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் பீனா. வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார், இவரது ஒரே மகள் ஆதிரா (19). குமரியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார்.மகளின் பிற்கால வாழ்க்கை நன்றாக அமையவே அவர் வெளிநாட்டிற்கு சென்று பணிபுரிந்தார்.
இவர், தனது உறவினர் அஜி என்பவர் வீட்டில் தங்கி படித்துவந்தார். கடந்த 23ஆம் திகதி மாலை அஜி வீட்டில் இருந்தவர்கள் வெளியே சென்றுள்ளனர்.
அப்போது வீட்டில் தனியாக இருந்த மாணவி ஆதிரா, தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். வெளியே சென்ற உறவினர்கள் வீட்டிற்கு வந்து ஆதிராவின் நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அதன்பிறகு ஆதிராவின் தற்கொலை குறித்து அவர்கள், காவல் நிலையத்திற்குத் தெரிவித்துள்ளனர். உடனே அங்கு விரைந்த காவல்துறையினர், ஆதிராவின் உடலைக் கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த செய்தியை அறிந்து வெளிநாட்டில் இருக்கும் பீனா துடித்து போனார். பின்னர் ஆதிராவின் செல்ஃபோனை பொலிசார் சோதனை செய்தனர். அப்போது, அவர் கடைசியாக கேரள வாலிபர் ஒருவரிடம் பேசியிருப்பது தெரியவந்தது.
இது குறித்து பொலிசார் கூறுகையில், ஆதிராவுக்கு கேரளா திருச்சூரைச் சேர்ந்த அஜய் என்ற வாலிபருடன் வாட்ஸ் அப் மூலம் காதல் ஏற்பட்டது. இந்த நிலையில் அஜய், ஆதிராவின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து ஆதிராவுக்கு அனுப்பியுள்ளார்.
அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஆதிரா, அவரிடம் சத்தம் போட்டு அந்தப் புகைப்படத்தை மாற்றச் சொல்லியிருக்கிறார். அதற்கு அஜய் 10 லட்சம் தந்தால் மாற்றலாம் என்றும் இல்லையென்றால் அந்தப் படத்தை சமூக வலைதளங்களில் பதிவிடப் போவதாகவும் கூறி அடிக்கடி மிரட்டி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் வெளிநாட்டில் இருக்கும் ஆதிராவின் தாயார் பீனாவுக்கும் அந்தப் புகைப்படத்தை அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக ஆதிரா, அங்கிருந்தே மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளார். ஆனாலும், தொடர்ந்து ஆதிராவை அஜய் மிரட்டி வந்துள்ளார். அதற்கு உடந்தையாக அஜய்யின் பெற்றோரும் இருந்துள்ளனர். இதில் ஆதிரா மிகுந்த மன வேதனையில் இருந்த நிலையிலேயே தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று தெரிவிக்கின்றனர்.
மேலும், ஆதிரா தற்கொலை வழக்கில் இது மட்டும்தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கின்றனவா என பல்வேறு கோணங்களிலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதோடு அஜயை கைது செய்ய நடவடிக்கையும் எடுத்துவருகின்றனர்.
இதனிடையில் பீனா நேற்று இரவு வெளிநாட்டில் இருந்து குமரிக்கு கண்ணீருடன் வந்தார்.
பின்னர் வாழவேண்டிய வயதில் இருந்த மகளுக்கு நடந்த இறுதி சடங்கில் பீனா அழுது கொண்டே பங்கேற்றது காண்போர் கண்களை குளமாக்கியது.