சீமானின் செயல்பாடுதான் வெட்கக்கேடானது.. இவர்களை போன்றவர்களால் பெண்களுக்கு பேராபத்து! கொந்தளித்த ஜோதிமணி எம்.பி
பாஜக ராகவனின் பாலியல் குற்றத்தை,சுரண்டலை சிறிதும் வெட்கம் இல்லாமல் அப்பட்டமாக ஆதரிக்கும் சீமானின் செயல்பாடுதான் வெட்கக்கேடானது என கரூர் எம்.பி ஜோதிமணி கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை வளசரவாக்கம் சின்னப் போரூர் பகுதியில் அமைந்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான ராவணன் குடிலில் ' மாயோன் பெருவிழா' நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒருவரின் அனுமதி , ஒப்புதல் இல்லாமல் படம் பிடிப்பது சமூக குற்றம், அநாகரிகம். படம்பிடித்தவரை கைது செய்திருக்க வேண்டும்.
உலகத்தில் நடக்காத ஒன்றையா கே.டி.ராகவன் செய்துவிட்டார். சட்டசபைக்குள் ஆபாச படம் பார்ப்பது தவறு என்று சொல்லலாம்.
ஒருவர் தனிப்பட்ட முறையில் அறையில் பேசுவதை படம் பிடிக்கிற அளவு கேடுகெட்ட சமூகமாக மாறி விட்டது , ஒட்டு கேட்பது , பதிவு செய்து வெளியிடுவதால் என்ன சாதிக்க முடியும். ஒருவரின் அனுமதி இல்லாமல் ஆடியோ , வீடியோவை படம் பிடிப்பது தவறு.
எல்லாப்பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்குத் தாரைவார்க்கிறார்கள். அதனைப்பற்றி பேசவில்லை? அதுவெல்லாம்தான் பிரச்சினை.
20 ஆண்டாகப் பார்க்கிறேன். எந்த தர்க்கமில்லாது 36 சட்டங்களை இயற்றுகிறார்கள் என திமுக எம்.பி திருச்சி சிவா கூறினார். அதைத்தான் பேச வேண்டும்.
அதனைவிடுத்து, ஆடியோ, வீடியோ வெளியிட்டார் என பேசுவது வீண், அதை ஏன் பார்க்க வேண்டும், அவரா பார்க்க சொன்னார் ? என சீமான் கூறினார்.
ராகவன் குறித்த சீமானின் கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.
சீமானின் கருத்து குறித்து கரூர் எம்.பி ஜோதிமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை,சுரண்டலை கேள்வி கேட்கும் சமூகம் சரியாகத்தான் இருக்கிறது.
பாஜக ராகவனின் பாலியல் குற்றத்தை,சுரண்டலை சிறிதும் வெட்கம் இல்லாமல் அப்பட்டமாக ஆதரிக்கும் சீமானின் செயல்பாடுதான் வெட்கக்கேடானது.
சீமான் ஒரு அரசியல் கட்சியின் தலைவர்.இவர் இப்படிப் பொறுப்பில்லாமல் ,பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை,சுரண்டலை ஆதரிப்பது அதிர்ச்சியளிக்கிறது.
நாம் தமிழர் கட்சியில் இருக்கும் கள்ளமில்லாத இளைஞர்களின் மனதில்,பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சரியென்ற மனநிலையை சீமான் உருவாககுகிறார்.
இது ஒட்டுமொத்த பெண்களுக்கும், தமிழ் சமூகத்திற்கும் ஆபத்தாகிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது.
பாஜகவிடமிருந்து மட்டுமல்ல இப்படிப்பட்ட ஆபாசமான,அறுவெறுக்கத்தக்க,ஆபத்தான செயல்பாடுகளை ஆதரிக்கும் திரு.சீமான் போன்றவர்களிடமும் பெண்களும்,தமிழ்சமூகமும் விழிப்புடன் இருக்கவேண்டும்.
சீமான் மீதும் கடந்த காலத்தில் இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.
பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது குற்றத்தை மறைக்கவே சீமான் ராகவனின் பாலியல் குற்றத்தை வெளிப்படையாக ஆதரிக்கிறாரோ என்கிற சந்தேகம் எழுகிறது.
மேலும் சீமான் பாஜகவின் B Team தான் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியிருக்கிறார். எப்படியிருந்தாலும் திரு.சீமானின் இந்த செயல் வெட்கக்கேடானது.
சீமான்,ராகவன் போன்றவர்களின் வளர்ச்சி தமிழ்நாட்டு பெண்களுக்கு பேராபத்தை விளைவிக்கும்.
தமிழகம் குறிப்பாக நமது எதிர்காலமான இளைஞர்களும்,மாணவர்களும் இப்போதாவது சீமானின் பொய் முகத்தை புரிந்து கொண்டு அவரைப் புறக்கணிக்க வேண்டும். அதுவே நாம் தமிழ்ச் சமூகத்திற்கு செய்யும் பெருந்தொண்டு என ஜோதிமணி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை,சுரண்டலை கேள்வி கேட்கும் சமூகம் சரியாகத்தான் இருக்கிறது.பாஜக ராகவனின் பாலியல் குற்றத்தை,சுரண்டலை சிறிதும் வெட்கம் இல்லாமல் அப்பட்டமாக ஆதரிக்கும் திரு.சீமானின் செயல்பாடுதான் வெட்கக்கேடானது. எனது அறிக்கை?#Save_Women_From_BJP & #Seeman pic.twitter.com/cC7CGGm23R
— Jothimani (@jothims) August 30, 2021