தமிழ்நாட்டில் 3 குழந்தைகள் பெற்றால் சலுகை - விசிக எம்.பி கோரிக்கை
தமிழ்நாட்டில் 3 குழந்தை பெற்றால் சலுகை வழங்கவேண்டுமென ரவிக்குமார் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.
குழந்தை பெற்றால் ஊக்கத்தொகை
உலகின் பல்வேறு நாடுகளில் பெண்களின் கருவுறுதல் விகிதம் குறைந்து வருவதால், மக்களை தொகை வீழ்ச்சியை சந்தித்து வருகின்றது.
இதனை கட்டுப்படுத்த அதிக குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு ஊக்கத்தொகை போன்ற சலுகைகளை சீனா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் வழங்கி வருகின்றன.

இந்தியாவிலும், ஆந்திராவில் மக்கள்தொகை மேலாண்மைக் கொள்கையின் கீழ் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சலுகைகளை அறிவிப்பது குறித்து ஆந்திர அரசு பரிசீலித்து வருகிறது.
2 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தை பெற்றுக்கொள்பவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.25,000, 3வது குழந்தை பெற்றுக்கொள்பவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஊட்டச்சத்து உதவியாக மாதம் ரூ.1000 வழங்கப்படும்.
3வது குழந்தையைப் பெறும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு 6 மாதங்களிலிருந்து 10 மாதமாக உயர்த்தப்படும் மற்றும் ஆண்களுக்கு 2 மாத தந்தைவழி விடுப்பு ஆகியவை பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் 3வது குழந்தைக்கு சலுகை
இதேபோல், தமிழ்நாட்டிலும் 3வது குழந்தை பெற்றுக்கொள்பவர்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டுமென விசிகவை சேர்ந்த விழுப்புரம் எம்.பி ரவிக்குமார், தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த கடிதத்தில், "அண்மையில் வெளியாகியிருக்கும் 2023-24 ஆம் ஆண்டுக்கான தேசிய குடும்ப சுகாதார சர்வே ( NFHS-6) அறிக்கையில் தமிழ்நாட்டைப் பற்றி வெளியாகியிருக்கும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.
இந்திய அளவில் மொத்தக் கருவுறுதல் விகிதம் 2.0 ஆக இருக்கும் நிலையில் தமிழ்நாட்டின் மொத்தக் கருவுறுதல் விகிதம் மிக மோசமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. அது 1.7 என்ற அளவில் உள்ளது.
இது இனிவருங்காலங்களில் தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் மிகப்பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும். இப்போதுள்ள மக்கள் தொகை ஒவ்வொரு ஆண்டிலும் குறைந்துகொண்டே போகும்.
ஒரு பெண்ணுக்குச் சுமார் 2.1 குழந்தைகள் என்ற மொத்தக் கருவுறுதல் விகிதமே (TFR) சமநிலைக்கு ஏற்றதாகும். கருவுறும் வயதை அடைவதற்கு முன்பே ஏற்படும் இறப்பு விகிதங்களையும் ஈடுகட்டியவாறு, ஒரு தாய் தனக்கும் தன் இணையருக்கும் 'ஈடுசெய்வதற்கு' இந்த விகிதம் வழிவகை செய்கிறது.
இந்தியாவில் மொத்தக் கருவுறுதல் விகிதம் ஏற்கனவே மக்கள் தொகை அதிகமாக உள்ள உத்தரப்பிரதேசத்தில் 2.2 ஆகவும் பீகாரில் 2.7 ஆகவும் தேசிய சராசரியைவிட அதிகமாக உள்ளது.
இதனால் இப்போது மட்டுமின்றி எதிர்காலத்திலும் ஒன்றிய அரசின் நிதியை அந்த மாநிலங்களே அதிகமாகப் பெறும். அத்துடன் தொகுதி மறுசீரமைப்பில் அந்த மாநிலங்களுக்குத்தான் கூடுதல் தொகுதிகள் கிடைக்கும்.
தமிழ்நாட்டின் மொத்தக் கருவுறுதல் விகித்தில் ஏற்பட்டிருக்கும் சரிவு இயற்கையாக ஏற்பட்டதல்ல. பெண்கள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்வதால் இது ஏற்பட்டுள்ளது. இந்திய அளவில் கருத்தடை செய்துகொள்வோரின் விகிதம் 36.5 ஆக உள்ளது.
ஆனால் தமிழ்நாட்டில் அது 56.6 ஆக உள்ளது. ஆண்கள் கருத்தடை செய்துகொள்ளும் விகிதமும்கூட தேசிய சராசரியைவிடத் தமிழ்நாட்டில் இரண்டு மடங்காக இருக்கிறது.
தமிழ்நாட்டின் மொத்தக் கருவுறுதல் விகிதத்தின் (TFR) சரிவைத் தடுத்து நிறுத்த உடனடியாகத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்ளுவதை ஊக்குவிக்கும் விதமாக சலுகைகளை அறிவிக்க வேண்டும்!கருத்தடை செய்துகொள்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்!
— Dr D.Ravikumar MP (@WriterRavikumar) June 1, 2026
====
தமிழ்நாட்டின் மொத்தக் கருவுறுதல் விகிதம் அபாயகரமான அளவில் குறைந்திருப்பது தொடர்பாக மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை… pic.twitter.com/LDnUN8foCi
மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்ளுவதை ஊக்குவிக்கும் விதமாக சலுகைகளை அறிவித்தல்; கருத்தடை செய்துகொள்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தல் எனத் தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |