தோனி நினைத்திருந்தால்…இதை கண்டிப்பாக செய்து இருக்க முடியும்: ரவி சாஸ்திரி புகழாரம்
தோனி ஒரு முறை முடிவு எடுத்து விட்டால் அதை அவர் மாற்றவே மாட்டார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக மகேந்திர சிங் தோனி மதிக்கப்படுகிறார், இவர் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பை, 50 ஓவர்கள் உலக கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் என பல வெற்றிகளை குவித்துள்ளது.
தோனி அனைத்து சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்று விட்ட நிலையில், ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டும் விளையாடி வருகிறார்.
Reuters
இதற்கிடையில் வரும் மார்ச் 31ம் திகதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ள நிலையில், இதில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக யார் செயல்படுவார்கள் என்று விவாதம் நடைபெற்று வருகிறது.
தோனி முடிவை மாற்ற மாட்டார்
இந்நிலையில் தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம், தோனி தனது ஓய்வு அறிவிப்பை ஒதுக்கி வைத்து விட்டு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விக்கெட் கீப்பராக இந்திய அணிக்கு திரும்புவாரா என்ற கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்துள்ள ரவி சாஸ்திரி, தோனி ஒரு முறை முடிவு எடுத்துவிட்டால் அதை மாற்றவே மாட்டார் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிப்பதற்கு முன்பு, அவர் நினைத்து இருந்தால் இன்னும் ஓரிரு ஆண்டுகள் அவர் டெஸ்ட் போட்டியில் விளையாடி இருக்க முடியும்.
மேலும் அவர் தனது 100 டெஸ்ட் போட்டிகளையும் நிறைவு செய்து, ரசிகர்கள் புடைசூழ டெஸ்ட் போட்டிகளுக்கு விடை கொடுத்து இருக்க முடியும்.
ஆனால் அவர் அதை விரும்பவில்லை, அவர் முற்றிலும் புதிய மனிதனாக இருக்கிறார், அப்படியே அவர் இருக்கட்டும் என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
PTI