நாங்கள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லவில்லை என்றால் உலகம் அழிந்துவிடாது.. தோனியின் அதிரடி பதில்!
பிளே ஆப் சுற்றுக்கு செல்லவில்லை என்றால் உலகம் ஒன்றும் அழிந்து விடாது என சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் தோனி தெரிவித்துள்ளார்.
மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் 91 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தியது.
இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் சென்னை அணி 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. எனினும் பிளே ஆப் சுற்றுக்கு அந்த அணி செல்ல வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
இந்த நிலையில் போட்டி முடிந்ததும் பேசிய சென்னை அணித்தலைவர் தோனி, பிளே ஆப் குறித்த தனது நிலைபாட்டினை விவரித்தார். அவர் கூறும்போது,
'இந்த வெற்றி உண்மையில் எங்களுக்கு உதவியுள்ளது. முன்கூட்டியே இப்படி ஒரு வெற்றி எங்காவது கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இது ஒரு சிறப்பான ஆட்டமாக இருந்தது. துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பீல்டிங்கை தெரிவு செய்ய விரும்பினோம். ஆனால் மனதளவில் அதில் தோற்றாலும் பரவாயில்லை என்று தான் இருந்தேன். அனைவரும் ஓரளவு நன்றாக பங்களித்தனர்.
கணிதத்தை பொறுத்தவரை நான் பெரிய ரசிகன் அல்ல. பள்ளியில் கூட நான் நன்றாக படித்ததில்லை. அதனால் ரன் ரேட் பற்றி யோசிப்பது உதவாது. நீங்கள் ஐபிஎல்-ஐ ரசிக்க வேண்டும்.
மற்ற இரண்டு அணிகள் விளையாடும் போது, நீங்கள் அழுத்தம் மற்றும் சிந்தனையில் இருக்க விரும்பவில்லை. அடுத்த ஆட்டத்தில் என்ன செய்வது என்று யோசிக்க வேண்டும். நாங்கள் பிளே ஆப்-புக்கு சென்றால் சிறப்பானது தான், இல்லையென்றால் உலகம் ஒன்றும் அழிந்துவிடாது' என தெரிவித்துள்ளார்.