தோனிக்கு வெற்றிகரமாக முழங்கால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது: சிஎஸ்கே தலைவர் காசி விஸ்வநாதன்
மும்பையில் தோனிக்கு முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளதாக சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு வியாழன் அன்று மும்பை மருத்துவமனையில் இடது முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. இது அவர் அடுத்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 17-வது சீசனில் விளையாடுவதற்கான நம்பிக்கையை அதிகரித்துள்ளது
சென்னை சூப்பர் கிங்ஸை ஐந்தாவது ஐபிஎல் பட்டத்திற்கு அழைத்துச் சென்ற தோனி, திங்கள்கிழமை இறுதிப் போட்டிக்குப் பிறகு அகமதாபாத்திலிருந்து மும்பைக்கு விமானம் மூலம் பறந்து, பிரபல விளையாட்டு எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் டின்ஷா பார்திவாலாவிடம் ஆலோசனை நடத்தினார்.
PTI
பிசிசிஐ மருத்துவக் குழுவில் உள்ள டின்ஷா பர்திவாலா, ரிஷப் பண்ட் உட்பட பல சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
"ஆமாம், தோனிக்கு மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் வியாழக்கிழமை வெற்றிகரமாக முழங்கால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் நலமாக இருக்கிறார், காலையில் அறுவை சிகிச்சை நடந்தது" என்று CSK CEO காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தினார்.
PTI
"அவர் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். அவர் மீண்டும் வழக்கமான செயல்களைத் தொடங்குவதற்கு முன்பு அவர் சில நாட்கள் ஓய்வில் இருப்பார். அடுத்த ஐபிஎல்லில் விளையாடுவதற்கு அவருக்கு போதுமான நேரம் கிடைக்கும் என்று இப்போது எதிர்பார்க்கப்படுகிறது," என்று அவருக்கு நெருக்கமான மற்றொரு வட்டாரம் தெரிவித்துள்ளதாக PTI செய்தி வெளியிட்டுள்ளது.