உணவு வாங்க பணம் கொடுங்கள் - வீதிகளில் யாசகம் பெற்று வாழ்ந்த முகலாய இளவரசர்
முகலாய ஆட்சி வீழ்ச்சியடைந்த பின்னர், இளவரசர் வீதிகளில் யாசகம் பெற்று வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
இந்தியாவில் முகலாய ஆட்சி
இந்தியாவை 1526 ஆம் ஆண்டு முதல் 1857 ஆம் ஆண்டு முகலாய மன்னர்கள் ஆண்டு வந்தனர். முகலாய ஆட்சி காலத்திலே, தாஜ்மகால், டெல்லி செங்கோட்டை ஆகிய உலக பாரம்பரிய தளங்கள் கட்டப்பட்டது.
முகலாய அரசின் கடைசி மன்னராக இரண்டாம் பகதூர் ஷா என்னும் பகதூர் சா சஃபார் இருந்தார்.
1857 ஆம் ஆண்டு சிப்பாய் கிளர்ச்சியின் போது, பிரித்தானிய படை பகதூர் சா சஃபாரை கைது செய்து பர்மாவில் உள்ள யங்கூனுக்கு நாடு கடத்தியது.
அத்துடன், இந்தியாவில் முகலாயர்களின் 300 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.
யாசகம் பெற்ற இளவரசர்
பகதூர் சா சஃபாருக்கு, 22 மகன்களும், 32 மகள்களும் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் ஏராளமானோரை, பிரித்தானிய படைகள் கொன்றதோடு, சிலரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிலரை நாடு கடத்தினர்.
இதில் 4 மகன்கள் உயிர் தப்பி, அவர்களின் வாரிசுகள் இன்று சாதாரண நிலையில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இதில் டெல்லி செங்கோட்டையில் பிறந்த மன்னர் பகதூர் சா சஃபாரின் மகன் மிர்சா ஜவான் பக்த், முகலாய அரசின் வீழ்ச்சிக்கு பிறகு வறுமை காரணமாக, தனது அடையாளத்தை மறைத்து இரவில் டெல்லியின் வீதிகளில் யாசகம் பெற்று வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
பகதூர் சா சஃபாரின் பேரனான கமர் சுல்தான் பகதூர், "எனக்கு உணவு வாங்க போதுமான அளவு பணம் கொடுங்கள்" எனக்கூறி டெல்லி வீதிகளில் யாசகம் பெற்றதாக "Begumat Ke Aansu" என்ற புத்தகத்தில் குவாஜா ஹசன் நிஜாமி எழுதியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |