ரோகித் சர்மா, டிரண்ட் போல்ட் அபாரம்... ஐதராபாத்தை ஊதித் தள்ளிய மும்பை
ஐதராபாத் அணிக்கு எதிராக டிரண்ட் போல்ட், ரோகித் சர்மா ஆகியோரின் அட்டகாசமான ஆட்டத்தால், மும்பை அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
தனியாளாக நின்று
தொடர்ந்து நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி, சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான 41 வது லீக் ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்தியது.
ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியில் அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் டக் அவுட் ஆகியும், அபிஷேக் ஷர்மா எட்டு ஓட்டங்களிலும் ஆட்டம் இழந்தனர்.
இஷான் கிஷன் சர்ச்சையான முறையில் ஒரு ரன்னில் பெவிலியன் திரும்பினார். நிதிஷ்குமார் ரெட்டி இரண்டு ஓட்டங்கள் மட்டுமே சேர்க்க ஐதராபாத் அணி 13 ஓட்டங்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அன்கீத் வர்மா 12 ஓட்டங்கள் சேர்க்க ஐதராபாத் அணி 35 ஓட்டங்களில் 5 விக்கெட்டுகளை இழந்தது. இந்த சூழலில் வழக்கம் போல் ஐதராபாத் அணியின் நட்சத்திர வீரர் ஹென்றிச் கிளாசன் தனியாளாக நின்று ஐதராபாத் அணியை காப்பாற்றினார்.
ஒன்பது பவுண்டரி இரண்டு சிக்ஸர் என 44 பந்துகளில் 71 ஓட்டங்கள் சேர்த்தார். இறுதியில் அபினவ் மனோகர் 43 ஓட்டங்கள் எடுக்க சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 143 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. மும்பை பந்துவீச்சில் அதிகபட்சமாக டிரண்ட் போல்ட் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
சுக்கு நூறாக உடைத்தார்
இதனையடுத்து 144 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. இதில் இம்பேக்ட் வீரராக களம் இறங்கிய ரோகித் சர்மா மீண்டும் தன்னுடைய திறமையை நிரூபித்தார்.
சன்ரைசர்ஸ் பந்துவீச்சை தனியாளாக நின்று ரோகித் சர்மா சுக்கு நூறாக உடைத்தார். தொடக்க வீரரான ரியான் ரிக்குல்டன் 11 ஓட்டங்களில் ஆட்டம் இழக்க, வில் ஜாக்ஸ் 22 ஓட்டங்களில் வெளியேறினார். எனினும் ரோகித் சர்மா மட்டும் தன்னுடைய அதிரடியை காட்டி 35 பந்துகளில் அரை சதம் அடித்தார்.
சூரியகுமார் யாதவ் வழக்கம் போல் பந்தை சிக்ஸருக்கு விரட்ட 19 பந்துகளில் அவர் 40 ஓட்டங்கள் எடுத்து விக்கெட்டை இறுதி வரை தக்கவைத்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 46 பந்துகளில் 70 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 8 பவுண்டரிகளும் மூன்று சிக்ஸர்களும் அடங்கும்.
இறுதியில் மும்பை அணி 15 புள்ளி நான்கு ஓவரில் மூன்று விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இது மும்பை அணிக்கு கிடைத்த 5வது வெற்றி ஆகும். அதேவேளை ஐதராபாத் அணியின் 6வது தோல்வி இதுவாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |