கொலை செய்யப்பட்டதாக கருதப்பட்ட இளம்பெண்: 31 ஆண்டுகளுக்குப் பின் தெரியவந்த உண்மை
ஜேர்மனியில், கொலை செய்யப்பட்டதாக கருதப்பட்ட ஒரு இளம்பெண், 31 ஆண்டுகளுக்குப் பின் உயிருடன் இருப்பது தெரியவந்தது.
அதைக் குறித்த செய்தி ஒன்று பல்வேறு பிரபல ஊடகங்களில் வெளியாகிவருகிறது.
மாயமான இளம்பெண்
வடக்கு ஜேர்மனியைச் சேர்ந்த பெட்ரா பாஸ்சிட்கா (Petra Pazsitka), 1984ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 26ஆம் திகதி காணாமல் போனார்.

அப்போது அவருக்கு வயது 24. கணினி அறிவியல் கற்றுவந்த பெட்ரா, Braunschweig என்னுமிடத்திலுள்ள பல் மருத்துவர் ஒருவரைக் காணச் சென்றுவிட்டு Wolfsburg என்னுமிடத்தில் வாழும் தன் பெற்றோரை காண்பதற்காக புறப்பட்டார்.
ஆனால், அவர் தன் பெற்றோர் வீட்டைச் சென்றடையவேயில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் Günter K (19) என்னும் இளைஞர், தான் பெட்ராவைக் கொலை செய்துவிட்டதாக பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.
ஆனால், பெட்ராவின் உடல் கிடைக்கவேயில்லை. என்றாலும், அவர் இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
31 ஆண்டுகளுக்குப் பின்...
இந்நிலையில், 2015ஆம் ஆண்டு, Düsseldorfஇல் வாழும் 55 வயதுடைய பெண்ணொருவர் வீட்டில் நடந்த கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரிக்கச் சென்றார்கள் பொலிசார்.
சூசேன் (Susanne Schneider) என்னும் அந்தப் பெண்ணிடம் நடத்திய விசாரணையின்போது, அவர் உண்மையில் 31 ஆண்டுகளுக்கு முன் காணாமல்போன பெட்ரா என்பது தெரியவந்தது.
பெட்ராவை அவருடைய பெற்றோரை சந்திக்க வைக்க அதிகாரிகள் முயற்சி செய்ய, அவர் தன் பெற்றோரை சந்திக்க மறுத்துவிட்டார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஊடகவியலாளர்களை சந்தித்த பெட்ரா, தன் தாய் தன்னை சிறுவயதில் துஷ்பிரயோகம் செய்ததாகவும், அடித்து உதைத்ததாகவும், தான் வீட்டை விட்டுச் செல்லும்போது ஒரே ஒரு விடயம் தன் மனதில் தோன்றியது என்றும், அது, எப்படியாவது வீட்டை விட்டு வெளியேறவேண்டும் என்பதுதான் என்றும் கூறினார்.
தற்போது, மீண்டும் பெட்ரா என்னும் பெயரிலேயே வாழ்ந்துவரும் அவர், வீடுகளை சுத்தம் செய்யும் வேலையைச் செய்கிறார்.
என் வாழ்க்கை எப்படி முடியும் என்பது எனக்குத் தெரியும் என்று கூறும் பெட்ரா, எனக்கு ஓய்வூதியம் எதுவும் கிடையாது, கடைசியாக நான் உணவு வங்கியை நாடவேண்டிய நிலைதான் ஏற்படும் என்கிறார்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |