மனைவி நளினியை நேரில் சந்தித்து பேசனும்! மாதக்கணக்கில் அவரை நேரில் காணாத நிலையில் சிறையில் உள்ள முருகன் கோரிக்கை
வேலூர் பெண்கள் சிறையில் உள்ள தனது மனைவி நளினியை நேரில் சந்தித்து பேச அனுமதி தர வேண்டும் என முருகன் மனு அளித்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும் அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவுபடி இருவரும் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து வந்தனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த மார்ச் மாதம் முருகன் நளினி நேரடி சந்திப்பு நிறுத்தப்பட்டது. இதனையடுத்து இருவரும் செல்போனில் வீடியோ அழைப்பு மூலம் பேச அனுமதி அளித்தனர்.
இதற்கிடையே முருகன் வேலூர் சிறையில் இருந்து அனுமதி இன்றி வெளிநாட்டில் உள்ள அவருடைய உறவினர்களிடம் பேச முயன்றார். இதனை தடுத்து நிறுத்திய சிறைக்காவலர்கள் முருகன் மீது அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.
இதனால் முருகன் நளினியுடன் செல்போனில் பேச தடை விதிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து முருகனுக்கு சிறையில் சலுகைகள் ரத்து செய்யப்பட்டன.
இந்த நிலையில் முருகன் சிறை சூப்பிரண்டு ருக்மணி பிரியதர்ஷினியிடம் மனு அளித்துள்ளார். அதில் தனக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும். நளினியுடன் நேரடியாக சந்தித்து பேச அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.