புத்தாண்டு பிறக்கும் சில மணிநேரம் முன்பு... ரூ 960 கோடியை நன்கொடையாக அளித்த எலோன் மஸ்க்
டெஸ்லா நிறுவனரான எலோன் மஸ்க் 268,000 டெஸ்லா பங்குகளை பிரபலமல்லாத சில தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நன்கொடையாக
குறித்த பங்குகளின் மதிப்பு சுமார் 108.2 மில்லியன் அமெரிக்க டொலர் என்றே கூறப்படுகிறது. இந்த நன்கொடையானது புத்தாண்டு பிறக்கும் சில மணிநேரம் முன்னர் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது எலோன் மஸ்கின் ஆண்டு இறுதி வரி திட்டத்தின் ஒருபகுதியாகவே கருதப்படுகிறது. மேலும், இந்தப் பங்குகள், தற்போது அத்தகைய பங்குகளை விற்கும் எண்ணம் இல்லாத குறிப்பிட்ட சில தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், நன்கொடையின் பயனாளிகள் யார் என்பது தொடர்பில் தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை. 2022ல், சுமார் 1.95 பில்லியன் டொலர் மதிப்புள்ள டெஸ்லா பங்குகளை நன்கொடையாக வழங்கினார்,
மேலும் 2021ல், தனது இலாப நோக்கற்ற அமைப்பான மஸ்க் அறக்கட்டளைக்கு 5.74 பில்லியன் டொலர் மதிப்பிலான பங்குகளை வழங்கினார். மனிதகுலத்தின் நலனுக்காக பாதுகாப்பான செயற்கை நுண்ணறிவை உருவாக்குவது உட்பட பல்வேறு காரணங்களுக்காக இந்த அறக்கட்டளை மானியங்களை வழங்கி வருகிறது.
டெஸ்லா நிறுவனத்தில்
ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் எலோன் மஸ்கின் மொத்த சொத்து மதிப்பு 408.3 பில்லியன் டொலர் என்றே கூறப்படுகிறது.
உலகின் மிகப் பெரிய பணக்காரரான மஸ்க், டெஸ்லா நிறுவனத்தில் சுமார் 12.8 சதவிகித பங்குகளை கொண்டுள்ளார்.
தற்போது 108.2 மில்லியன் அமெரிக்க டொலர், இந்திய மதிப்பில் ரூ 960 கோடி மதிப்பிலான நன்கொடை அளித்தது தொடர்பில் எலோன் மஸ்க் வெளிப்படையாக கருத்தேதும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |