உக்ரைன் போர் குறித்து புடினிடம் பேசினேனா? உலக கோடீஸ்வரரின் விளக்கம்
புடினிடம் உக்ரைன் போர் தொடர்பில் பேசியதாக கூறப்படுவதை எலான் மஸ்க் திட்டவட்டமாக மறுத்துள்ளார்
விண்வெளி தொடர்பாக 18 மாதங்களுக்கு முன் ஒரே முறை தான் புடினிடம் பேசியதாக மஸ்க் தெரிவித்துள்ளார்
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் உக்ரைன் போர் குறித்து ரஷ்ய ஜனாதிபதி புடினிடம் பேசியதாக வெளியான தகவலை மறுத்துள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா போர் தொடர்பில் எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் வாக்கெடுப்பு நடத்தினார். அதில் உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும் என்றால் டான்பாஸ் மற்றும் கிரீமியாவில் வாழும் மக்கள், தாங்கள் ரஷ்யாவில் இணைய வேண்டுமா அல்லது உக்ரைனில் இணைய வேண்டுமா என முடிவெடுக்க வேண்டும் எனவும், இதற்கு ஆம், இல்லை என்ற இரு விருப்பங்களை அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வாக்கெடுப்பில் ஆம் என 59 சதவீத வாக்குகளும், இல்லை என 41 சதவீத வாக்குகளும் பதிவானத்தைத் தொடர்ந்து, உக்ரைன் நாட்டின் தலைவர்கள் பலரும் எலான் மஸ்கின் வாக்கெடுப்பிற்கு கண்டனம் தெரிவித்தனர்.
Andrew Harrer/Bloomberg
இதற்கிடையில், அரசியல் ஆபத்து சூழ்நிலை ஆலோசனை நிறுவனமான யூரோஏசியன் குழு தலைவர் பிரிம்மர் கூறிய விடயம் சலசலப்பை ஏற்படுத்தியது.
அதாவது லூகன்ஸ்க், டொனேட்ஸ்க், ஷபோரிஷஹியா மற்றும் கார்சன் ஆகிய நகரங்களை ரஷ்யாவின் அங்கமாக உக்ரைன் அங்கீகரிக்க வேண்டும் மற்றும் யாருடனும் சேராமல் நடுநிலையாக இருப்போம் என உக்ரைன் உறுதியளித்தால் பேச்சுவார்த்தை நடத்த தயார் என புடின் தன்னிடம் கூறியதாக மஸ்க் என்னிடம் கூறினார் என பிரிம்மர் தெரிவித்தார்.
wikipedia
அதேபோல் கிரீமியா மீது உக்ரைன் படையெடுத்தால் அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் எனவும் புடின் கூறியதாக மஸ்க் தன்னிடம் தெரிவித்தார் என்றும் பிரிம்மர் கூறினார்.
இந்த நிலையில், உக்ரைன் போர் குறித்து புடின் தன்னிடம் கூறவில்லை என்றும், இந்த விடயம் தொடர்பாக அவருடன் பேசவில்லை என்றும் மஸ்க் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அத்துடன் 18 மாதங்களுக்கு முன் ஒரே ஒருமுறை தான் புடினிடம் பேசியதாகவும், அதுவும் விண்வெளி தொடர்பாக மட்டுமே உரையாடியதாகவும் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
Reuters