எலான் மஸ்க்கின் டெஸ்லாவுக்கு ரூ. 1,996 கோடி அபராதம்:அமெரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
அமெரிக்காவில், டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோபைலட் அம்சத்தால் ஏற்பட்ட ஒரு விபத்து தொடர்பாக அந்நிறுவனத்துக்கு பெரும் தொகையை அபராதமாக விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த இந்த விபத்தில், ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் படுகாயமடைந்தார்.
என்ன நடந்தது?
புளோரிடாவைச் சேர்ந்த ஜார்ஜ் மெக்கீ என்பவர் தனது டெஸ்லா காரில் ஆட்டோபைலட் அம்சத்தைப் பயன்படுத்தி பயணம் செய்துள்ளார். //// அப்போது, அவரது செல்போன் காரில் கீழே விழுந்ததால், அதை எடுப்பதற்காக குனிந்துள்ளார்.
கார் தானியங்கி முறையில் செல்வதால் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று அவர் நினைத்ததே இதற்குக் காரணம்./// ஆனால், அப்போது எதிர்பாராதவிதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு காரின் மீது மோதியது.
இதில், 22 வயது பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் பயணித்த நண்பர் படுகாயமடைந்தார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் டெஸ்லா நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்தனர்.
நீதிமன்றத்தின் தீர்ப்பு
நீண்ட கால விசாரணைக்குப் பிறகு, வழக்கை விசாரித்த புளோரிடா நீதிமன்றம் தனது தீர்ப்பை வெளியிட்டது.
இந்த விபத்துக்கான இழப்பீடாக மொத்தம் 329 மில்லியன் டொலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2,700 கோடி) பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதில், விபத்துக்கு ஆட்டோ பைலட் அமைப்பும் ஒரு காரணம் எனத் தெரிவித்த நீதிமன்றம், டெஸ்லா நிறுவனம் மட்டும் 242 மில்லியன் டொலர்களை(சுமார் ரூ. 1,996 கோடி) செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தது. மீதமுள்ள தொகையை, காரை ஓட்டிய ஜார்ஜ் மெக்கீ செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து டெஸ்லா நிறுவனம் மேல்முறையீடு செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |