வழக்கிலிருந்து விடுவிக்கவேண்டும்... கணவரைக் கொன்ற பெண்ணும் காதலரும் மேல்முறையீடு
Allahabad HC to hear Muskan, Sahil's death sentence appeal: கணவரைக் கொலை செய்த பெண்ணும் காதலரும் தங்களை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரியுள்ள நிலையில், மேல்முறையீட்டு வழக்கை அலகாபாத் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
மனைவியைக் காண்பதற்காக பிரித்தானியாவிலிருந்து ஆசையுடன் ஓடோடி வந்த கணவரை காதலன் உதவியுடன் துண்டு துண்டாக வெட்டி ஒரு ட்ரம்முக்குள் போட்டு சிமெண்ட் கலவையால் மூடிய பெண்ணை யாரும் எளிதில் மறந்திருக்கமுடியாது.
கணவரை காதலன் உதவியுடன் துண்டு துண்டாக வெட்டிய பெண்
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சௌரப் ராஜ்புத் (Saurabh Rajput, 29), பிரித்தானியாவில் கடற்படையில் சரக்குக் கப்பல்களைக் கையாளும் பணியிலிருந்துள்ளார்.

தனது மகளின் பிறந்தநாளன்று, தன் மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக, பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி லண்டனிலிருந்து இந்தியா வந்த ராஜ்புத், மார்ச் மாதம் 4ஆம் திகதி திடீரென மாயமானார்.
இந்நிலையில், ராஜ்புத்தின் மனைவியான முஸ்கன் ரஸ்தோகியும், அவரது காதலரான சாஹில் ஷுக்லாவுமாக சேர்ந்து ராஜ்புத்தைக் கொன்று, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி, ஒரு ட்ரம்மில் போட்டு, அதை சிமெண்டால் மூடிவிட்டது விசாரணையில் தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து, கணவனைக் கொலை செய்த முஸ்கன் ரஸ்தோகிக்கும், அவரது காதலரான சாஹில் ஷுக்லாவுக்கும் மீரட் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
மேல்முறையீடு
இந்நிலையில், முஸ்கனும் சாஹிலும், தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்கள்.

தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முறையான ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும், நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டவிரோதமானது, தன்னிச்சையானது என்றும் முஸ்கன், சாஹில் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, அவர்களுடைய மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள அலகாபாத் நீதிமன்றம் சம்மதித்துள்ளது.
ஆகவே, நவம்பர் மாதம் 30ஆம் திகதி முஸ்கன், சாஹில் மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.